Breaking News

மாவட்ட ஆட்சியர் வருவாய் துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்

 கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. தலைமையில் வருவாய் துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது,

வருவாய்த் துறை மாநிலத்தின் நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குகிறது. சீரான சமூக வளர்ச்சிக்கு இத்துறையின் பங்கு மிகவும் முக்கியமாகும்.சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதில் வருவாய்த் துறையின் பங்களிப்பு இன்றியமையாததாகும். 

வருவாய்த்துறை கிராமங்கள் முதல் நகரங்கள் வரை முழுமையான கட்டமைப்பினை கொண்டுள்ளதால் சமூக பாதுகாப்புத் திட்டங்களை திறம்பட செயல்படுத்த முடிகிறது. 

அரசின் பல்வேறு சமூக பொருளாதார திட்டங்கள் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், ஆதரவற்றோர்கள், முதியோர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் அரசின் உதவித் தொகையை பெறுவதற்கும், தொழில் முனைவோர் மற்றும்

பொதுதனியார்  தொழிற்சாலைகள், பயன்பெறும் வகையில் பல்வேறு விதமான சான்றிதழ்களையும், சாதி, பிறப்பு, இறப்பு, வாரிசு சான்று, வருமான சான்று, பட்டா மாறுதல் சான்று மற்றும் பல்வேறு உரிமங்கள் ஆகியவற்றை இத்துறை வழங்கி வருகிறது.

எனவே, கோவை மாவட்டத்தில் பட்டா மாறுதல், சான்றிதழ்கள் வழங்குதல், நில அளவைப்பணி தொடர்பாக நிலுவையில் உள்ள கோப்புகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்,முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, முதலமைச்சரின் உழவர்  பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை,  போன்ற  பல்வேறு உதவித்தொகைகள் ஆகிய அரசு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் தகுதியான பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(கணக்கு) சுஜாதா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments