Breaking News

இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கு பயிற்சி வகுப்பு

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் மாவட்டம், ராஜ வீதி, துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று(15.12.2021) பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ், மாவட்ட அளவில் தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் என். கீதா, மாவட்ட கல்வி அலுவலர்(பேரூர்) ஏ.எம்.பழனிச்சாமி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கல்வி ஒருங்கிணைப்பாளர் கே.லெனின்பாரதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டம் கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் செயல்படாத காரணத்தால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்புகளை ஈடு செய்வதற்காக தினசரி மாலை 5 மணி முதல் மாலை 6.30 மணி வரை மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், இல்லம் தேடிக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டமானது தன்னார்வலர்கள் பங்கேற்புடன் செயல்படுத்தப்படும்.

தன்னார்வலர்களை இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தில் அதிகம், இணைப்பதற்கும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் கோவை மாவட்டத்தில் ஒன்பது கலைக் குழுக்கள் 15ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி 400-க்கும்

மேற்பட்ட தன்னார்வலர்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.  CSO சமூக அமைப்புகள் சார்ந்த உறுப்பினர்கள் இணைய வழியாக தன்னார்வலர்களை பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை தன்னார்வலர்கள் ஆக சேர்வதற்கு கல்லூரிகளுக்கு சென்று ஊக்கப்படுத்தி வருகின்றனர். நாளதுவரை 500 கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்கள் ஆக சேர்ந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 2,089 குடியிருப்புகளில் 1,64,000 மாணவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.  மாவட்டத்திற்கு 8,200 தன்னார்வலர்கள் தேவை உள்ள நிலையில் தற்போது 6,471 தன்னார்வலர்கள் பதிவு செய்து உள்ளனர். 

மேலும், இல்லம் தேடிக் கல்வித்திட்டம் பணிகளை சிறப்பாக செயல்படுத்திட மாவட்ட அளவிலான குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒன்றிய அளவில் உள்ள இல்லம் தேடிக் கல்வித்திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்திட ஒன்றிய அளவிலான குழு அமைக்கப்பட்டு வருகிறது.

பள்ளி அளவில் தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், இல்லம் தேடிக் கல்வி, கைப்பேசி செயலி மூலம் தன்னார்வலர்கள் விபரங்களை சரிபார்க்கும் பணியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் தலைமையாசிரியர் இணைந்து தன்னார்வலர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அவர்களது விபரங்களை சரிபார்க்கும் பணியில்  ஈடுபட்டு தன்னார்வலர்களை தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாவட்ட அளவில் இன்று மற்றும் நாளை(16.12.2021) ஆகிய இரண்டு நாட்கள் 195 கருத்தாளர்களுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள், cso உறுப்பினர்கள் இணைந்து இல்லம் தேடி கல்வித்திட்ட செயல்பாடுகளை குறித்து பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் நோக்கத்தினைப் புரிந்து கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களும் இத்திட்டத்தினை ஆதரித்து, மாணவ மாணவிகளின் எதிர்காலத்திற்கு உதவிடும் வகையில், அரசுப் பள்ளிகளை வலுப்படுத்திட கைகோத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., தெரிவித்தார்.

No comments

Thank you for your comments