இந்திய சமூகத்தில் பிரதமர் மோடியை விட மதிக்கத்தக்க தலைவர் முதல்வர் ஸ்டாலின் தான்!... கே.எஸ். அழகிரி புகழாரம்
சென்னை, டிச.30-
திமுகவை கடுமையாக தாக்கிய மறைந்த நாவலர் நெடுஞ்செழியன் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்திருப்பது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி பாராட்டு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 137 வது ஆண்டு விழா மற்றும் வங்க தேசம் விடுதலை பெற்ற 50வது ஆண்டு பொன்விழா, வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் 28-12-2021 அன்று மாலை கொண்டாடப்பட்டது. தண்டையார்பேட்டை கேப்டன் மகாலில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்எஸ். திரவியம் தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சிறப்புரையாற்றினார்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேசுகையில், உலக வரைப்படத்தில் வங்கதேசம் என்ற நாட்டையே உருவாக்கியவர் இரும்பு மனுசி இந்திராகாந்தி ஆனால் அவரை பற்றி ஒருவார்த்தை கூட பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு மனம் வரவில்லை.
அண்மையில் முதல்வர் ஸ்டாலின், நாவலர் நெடுஞ்செழியன் சிலையை திறந்து வைத்தார். நாவலர், தனது கடைசிக்காலத்தில், திமுகவில் இருந்து விலகி, எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவில் சேர்ந்து திமுகவை கடுமையாக சாடினார். ஆனாலும் அவரது அருமை பெருமைகளை உணர்ந்து அவருக்கு சிலை வைத்தவர் முதல்வர் ஸ்டாலின். எனவே இந்திய சமூகத்தில் பிரதமர் மோடியை விட மதிக்கத்தக்க தலைவர் முதல்வர் ஸ்டாலின் தான், பண்டித நேருவை இழிவுப்படுத்தி எழுதப்பட்ட புத்தகமொன்றை, தி.நகர் பள்ளியொன்றில் பாஜகவை சேர்ந்த எச். ராஜா வெளியிட்டிருக்கிறார். இது தவறான செயல் மட்டுமல்ல: கண்டிக்கத்தக்கதும் ஆகும்.
இந்திய தேசம் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்ததற்கு காரணம் ஜவஹர்லால் நேருவும் காங்கிரஸ் கட்சியும் தான் .குண்டூசி கூட செய்ய கூட முடியாத இந்தியா, இரும்பு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதும் உணவு, சிமெண்ட். உற்பத்தியிலும் நாடு தன்னிறைவு பெற வழி வகுத்த மாபெரும் தலைவர் நேரு. அவரை பற்றி பேசுவதற்கு பாஜகவினருக்கு எந்த தகுதியும் கிடையாது
நாட்டின் விடுதலைக்காக 13 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் நேரு. 9 வருடங்கள் சிறை தண்டணை அனுபவித்தவர் காமராசர் 9 நிமிடங்கள் கூட சுதந்திரத்திற்காக சிறையில் இல்லாதவர்கள் பாஜகவினர். எனவே காங்கிரஸ் பற்றியோ நேருவை பற்றியோ பேச அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்று அழகிரி சாடினார்..
முன்னதாக நடந்தநிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, பொன் கிருஷ்ணமுர்த்தி, முன்னாள் எம்எல்ஏ உ பலராமன், சென்னை மாவட்ட தலைவர்கள் முத்தழகன், ரஞ்சன் குமார், மீனவர் பிரிவு மாநில தலைவர் ஜார்ஜ் ராபின்சன், மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் சுதா ராமகிருஷ்ணன், மாநில செயலாளர்கள் பாஸ்கர், கடல் தமிழ்வாணன், வட சென்னை ரஞ்சித், முனிஸ்வர் கணேஷ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியை காங்கிரஸ் பொது செயலாளர் கவிஞர் ராமலிங்கஜோதி சிறப்பாக தொகுத்தளித்தார்
No comments
Thank you for your comments