Breaking News

தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மிளகாய் குழித்தட்டு நாற்றுகள் நடவு செய்யும் பணிகளை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்

 திருவள்ளுர், டிச.30-

திருவள்ளுர் மாவட்டம், திருவள்ளுர் ஊராட்சி ஒன்றியம், தொட்டிக்கலை கிராமத்தில் நேற்று (29.12.2021) ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இயற்கை முறையில் 150 ஹெக்டேர் பரப்பளவில் யு.எஸ். 341 மிளகாய் குழித்தட்டு நாற்றுகள் நடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ்  அவர்கள் செய்தியாளர்களுடன் சென்று துவக்கி வைத்து, விவசாயிகளோடு இணைந்து நாற்றுக்களை நடவு செய்து, விவசாயிகளுக்கு நாற்றுக்கள் மற்றும் விவசாய இடுபொருட்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :

திருவள்ளுர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், இயற்கை முறையில் 150 ஹெக்டேர் பரப்பளவில் சிவப்பு மிளகாய் சாகுபடி செய்யும் திட்டத்தை மாண்புமிகு தமி;;ழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்திய அளவில் உள்ள அனைத்து மாநிலங்களோடு ஒப்பிடுகையில், நம் தமிழகத்தில் முதன் முறையாக மாண்புமிகு தமி;;ழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விவசாயிகளுக்கென அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில், மாண்புமிகு வேளாண்மை&உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், இயற்கை முறையில் நஞ்சற்ற மிளகாய் சாகுபடி செய்வதை ஊக்குவித்து விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வருமானத்தை பெருக்கும் பொருட்டு முதற்கட்டமாக ரூ.30 இலட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளதனை தொடர்ந்து, திருவள்ளுர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தரமான மிளகாய்களை உற்பத்தி செய்து உயர் விளைச்சல் பெறவும், விவசாயிகளுக்கு சரியான சந்தை வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டும் என்ற நோக்கத்திலும் தோட்டக்கலைதுறை, நல்லசந்தை தொண்டு நிறுவனர் திரு.ஜெகன் மற்றும் ஆச்சி மசாலா நிறுவனத்துடன் இணைந்து சிவப்பு புரட்சியாக 150 ஹெக்டேர் பரப்பளவில் யு.எஸ். 341 மிளகாய் குழித்தட்டு நாற்றுக்கள் நடவு பணிகளை துவக்கி வைக்கப்பட்டது.

ஏற்கனவே திருவள்ளுர் மாவட்டத்தில் பச்சை மிளகாய் சாகுபடி நிறைய செய்யப்பட்டு வருகிறது. இந்த சிவப்பு மிளகாயை ஒரு வருடத்திற்கும் சேமித்து வைக்கலாம். பச்சை மிளகாயைவிட சிவப்பு மிளகாய்க்கு அதிகளவில் விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது விவசாயிகளுக்கு நல்ல ஒரு வாய்ப்பு ஆகும். ஆகவே, சிவப்பு மிளகாய் சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும்.

இத்திட்டத்தின் மூலம் முதற் கட்டமாக 500 விவசாயிகள் பயன்பெற உள்ளனர். நடப்பாண்டில் திருவள்ளுர், ஆர்.கே.பேட்டை, திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, எல்லாபுரம், பூண்டி, கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூர் மற்றும் சோழவரம் ஆகிய வட்டாரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது விவசாயிகளிடமிருந்து பெறப்படும் விளைபொருட்களை நல்ல சந்தை தொண்டு நிறுவனத்தினர், ஆச்சி மசாலா நிறுவனத்துடன் இணைந்து கொள்முதல் செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. காய்ந்த மிளகாய் சந்தைபடுத்துவதற்கான வாய்ப்புகளும் உருவாக்கி தரப்படும்.


விவசாயிகளுக்கு தேவையான யு எஸ் 341 மிளகாய் இரகம் நாற்றுகள் அரசு தோட்டக்கலை பண்ணையில் 30 இலட்சம் எண்ணிக்கையில் குழித்தட்டுமுறையில் உற்பத்தி செய்து 1 ஹெக்டருக்கு 20,000 ஆயிரம் நாற்றுகள் ரூ.20,000 மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். திருவள்ளுர் மாவட்டத்தில் 2216 ஹெக்டர் பரப்பளவில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் மிளகாய் பயிர் 706 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது பொதுவாக விவசாயிகள் வருடம் முழுவதும் பச்சை மிளகாய் உற்பத்திக்காகவும் அக்டோபர் & ஜனவரி மாதங்களில் காய்ந்த மிளகாய் உற்பத்திக்காகவும் அனன்யா மிளகாய் இரகம் மற்றும் குண்டு மிளகாய் நாட்டு இரகம் விதைகளை பயன்படுத்தி கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ரகங்களை பயிரிடும் போது அதன் முளைப்பு திறன் குறைவாக இருக்கும். 1 ஹெக்டேருக்கு 1.5 &லிருந்து 2 டன் வரை மகசூல் கிடைக்கிறது.

இதனை விவசாயிகள் நேரடியாக காய்கறி சந்தைகளில் விற்பனை செய்யும் போது ரூ.1.5 இலட்சம் வருமானம் கிடைக்கிறது மற்றும் பச்சை மிளகாய் பொறுத்த வரை சந்தை விலை நிரந்தரமாக இல்லாததால் பச்சை மிளகாய் சாகுபடி செய்யும்போது விவசாயிகளுக்கு நிரந்தரமான வருமானம் கிடைப்பதில்லை. இந்நிலையில் சந்தைக்கு ஏற்ற யு எஸ் 341 என்ற மிளகாய் இரகத்தினை விவசாயிகள் பயிரிடும்போது செலவு குறைந்து அனன்யா மிளகாய் இரகம் மற்றும் குண்டு மிளகாய் நாட்டு ரகத்தினை விட இருமடங்கு அதிகமாக 2&4 டன் மகசூல் கிடைத்து வருமானமும் ரூ.2&3 இலட்சம் அளவில் இருமடங்காக பெருகுகிறது. 

எனவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி, விவசாயிகள் இயற்கை முறையில் மிளகாய் சாகுபடி செய்தும் நஞ்சில்லா விளைபொருள் இருமடங்கு உற்பத்தி செய்து மும்மடங்கு வருமானத்தை பெருக்கியும் பயன்பெற வேண்டும். 

சிவப்பு மிளகாய் சாகுபடி செய்யும் இந்த திட்டம் நமது மாவட்டத்தில் சிறப்பான முறையில் நடைபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது மூன்று மாதத்திற்கு பிறகு விளைச்சலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின் மதிப்பீடு அடிப்படையில், இனியும் அதிகப்படுத்த அரசு சார்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்கள்.

தொட்டிக்கலை கிராமத்தில்; வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக, ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியம் அடிப்படையிலான வேளாண் இடுபொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, திருவள்ளுர் ஊராட்சி ஒன்றியம், தண்ணீர்குளம் கிராமத்தில்; இயற்கை முறையில் 10 ஏக்கர் பரப்பளவில் தைவான் பிங்க் அர்கா கிரன் மற்றும் லக்னோ 49 உள்ளிட்ட பல்வேறு வகையிலான கொய்யாக்கள் சாகுபடி செய்யப்பட்டு வரும் பகுதிகளையும், இச்சாகுபடிக்காக இயற்கை முறையில் உரம் தயாரிக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வே) / வேளாண்மை துணை இயக்குநர் திரு.வி.எபிநேசன், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி.ஐ.ஜெபகுமாரி அனி, நல்லசந்தை தொண்டு நிறுவனர் திரு.ஜெகன், ஆச்சி குழுமம் நிர்வாக இயக்குநர் திரு.அஸ்வின் பாண்டியன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் திருமதி.அஸ்வினி பிரியா, திருமதி.கோமதி, திரு.நாகராஜன், வேளாண்துறை உதவி இயக்குநர் முனைவர்.ஸ்ரீசங்கரி, விவசாயி திரு.குமார், தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்துறை அலுவலர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.






No comments

Thank you for your comments