பரோலில் வந்த நளினியை கட்டித்தழுவி கண்ணீரோடு வரவேற்ற தாய் பத்மா
வேலூர், டிச.29-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது தாய் பத்மாவின் உடல்நிலையை காரணம் காட்டி அவரை கவனித்துக்கொள்ள வேண்டும் அதற்காக பரோல் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அதில் தமிழக அரசு நளினிக்கு பரோல் வழங்கப்படும் எனக் கூறியதை அடுத்து நளினிக்கு 30 நாள் பரோல் வழங்கி ஆணையிட்டது.
அதன் தொடர்ச்சியாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி தற்போது 30 நாள் பரோலில் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் வெளியே வந்துள்ளார்.
இவர் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் உள்ள தனது தாயார் பத்மா வாடகைக்கு தங்கி உள்ள வீட்டில் தங்க உள்ளார். சுழற்சி முறையில் 2 டி.எஸ்.பி தலைமையில் துப்பாக்கி ஏந்திய 50 காவலர்கள் இங்கு 30 நாட்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து 10 மீட்டர் தொலைவில் பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பரோலில் வரும் நளினி தொலைக்காட்சிக்கு அல்லது பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது, அரசியல் பிரமுகர்களை சந்திக்கக்கூடாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கூடாது, குறிப்பிட்ட அளவை காட்டிலும் வெளியில் செல்லக்கூடாது, வெளியாட்களை சந்திக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது சேர்த்து நான்காவது முறையாக பரோலில் வெளியில் வருகிறார் நளினி. முதலில் தனது சகோதரன் திருமணத்திற்க்கும், பிறகு தனது தந்தை இறப்புக்கும், இறுதியாக கடந்த 2019-ம் ஆண்டு தனது மகள் திருமண ஏற்பாட்டை கவனிக்க பரோலில் வந்துள்ளார்.
தற்போது தாய் பத்மாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு 4 வது முறையாக பரோலில் வந்துள்ளார். சிறையில் இருந்து வெளியேறி பிரம்மபுரத்தில் உள்ள வீட்டை வந்தடைந்த நளினியை வீட்டில் இருந்த தாய் பத்மா கட்டித்தழுவி கண்ணீருடன் வரவேற்றார்.
No comments
Thank you for your comments