Breaking News

பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் தேர்வு - மருத்துவத்துறை அறிவிப்பு

சென்னை

கொரோனா தொற்று காலத்தில் வெளியாதார முறையில் பணிபுரிந்த சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்களின் அரிய பணியினை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் 2448 துணை பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்கள், 4848 இடைநிலை சுகாதார பணியாளர்களை மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலமாக தேர்வு செய்து பணியமர்த்த அரசு ஆணை வெளியிட்டுள்ளது.



இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:

பொதுமக்களுக்கு சுகாதார சேவைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் இந்த அரசு வெளியிட்டுள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசாணை எண்:516 நாள்: 19.11.2021 படி 2448 பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் (ஆண் சுகாதார ஆய்வாளர்கள் (Gr-) 2448 துணை சுகாதார - நலவாழ்வு மையங்களிலும் மற்றும் மருத்துவம் (ம) நல்வாழ்வுத் துறை அரசாணை எண்: 392 நாள்:30:08.2021, மருத்துவம் (ம) நல்வாழ்வுத் துறை அரசாணை எண்:483 நாள்: 01.11.2021 படி 4848 இடைநிலை சுகாதார பணியாளர்கள் துணை சுகாதார - நலவாழ்வு மையத்திற்கு ஒருவர் என்ற விகிதத்தில் ஒப்பந்த முறையில் பணியமர்த்த ஆணை பிறப்பித்துள்ளது. 

இந்த அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் (ஆண்)/ சுகாதார ஆய்வாளர்கள் (Gr-II) மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் செயல்படும் மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

இதற்கான அறிவிப்பு செய்திதாள்களிலும் தேசிய நலவாழ்வு குழுமம் மற்றும் மாவட்ட நலவாழ்வு குழுமம் வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட தகுதி அடிப்படை மற்றும் முற்றிலும் வெளிப்படையான முறையில் பணியமர்த்தப்பட தேவையான வழிகாட்டு நெறிகள் மருத்துவம் (ம) நல்வாழ்வுத் துறை அரசாணை எண்:531 நாள்: 25.11.2021-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் வெளியாதார முறையில் பணிபுரிந்த சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்களின் அரிய பணியினை கருத்தில் கொண்டு மாவட்ட சங்கங்களின் வாயிலாக தேர்வு நடைபெறும் போது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் இவர்கள் பணிபுரிந்தமைக்கான முன்னுரிமை அளிக்கப்பட்டு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் இந்த நல்லதொரு வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு, மருத்துவத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments