Breaking News

வெல்லம், நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி தயாரிப்பில் கலப்படம் கண்டறியப்படுமானால் கடும் நடவடிக்கை... ஆட்சியர்

ஈரோடு :

வெல்லம், நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி போன்ற தயாரிப்பு ஆலைகளில் கலப்படம் ஏதேனும் கண்டறியப்படுமானால் கடும் நடவடிக்கை என்று ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உருண்டை வெல்லம், நாட்டுச்சர்க்கரை, அச்சுவெல்லம், கருப்பட்டி தயாரிக்கும்  ஆலைகளில் வெல்லம் வெண்மையாக இருப்பதற்காக சூப்பர் பாஸ்பேட், சோடியம் பை கார்பனேட், கால்சியம் கார்பனேட், சோடியம் ஹைட்ரோ சல்பேட், காஸ்டிக் சோடா மற்றும் இதர வேதிப்பொருட்கள் மைதா, ரேஷன் அரிசி மற்றும் அஸ்கா சர்க்கரை ஆகியவை அதிகளவில் கலப்படம் செய்து தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவருகிறது.  

கெமிக்கல் கலந்த வெல்லத்தை பொதுமக்கள் சாப்பிடும்பொழுது வயிற்றுப்போக்கு, சிறுநீரகக் கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு  தரமான முறையில் கலப்படமில்லாத வெல்லம், நாட்டுச்சர்கரை மற்றும் கருப்பட்டி தயாரிக்கும் ஆலை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்களுடைய தயாரிப்பு மற்றும் இருப்புக் கூடங்களில் உடனடியாக  சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 

அவ்வாறு கண்காணிப்பு கேமரா பொருத்தாத உரிமையாளர்கள் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

தமிழ்நாடு உணவு பாதுகாப்புச்சட்டம் 2006 - மற்றும் விதி 2011-ன்படி இனிவருங்காலங்களில் வெல்லம், நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி போன்ற தயாரிப்பு ஆலைகளில் கலப்படம் ஏதேனும் கண்டறியப்படுமானால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் உணவுப்பொருட்கள் விற்பனை தொடர்பான புகார்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கோ அல்லது ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் அலுவலக தொலைபேசி எண் 0424-2223545 என்ற எண்ணிற்கோ புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஈரோடு.


No comments

Thank you for your comments