Breaking News

தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளை அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் ஆய்வு...

 காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண் தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

தங்கும் அறைகள், உணவு உண்ணும் கூடங்கள், சுகாதார வளாகங்கள், உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை, சுங்குவார்சத்திரம்,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகளில் செயல்பட்டுவரும் தொழிற்சாலைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண் தொழிலாளர்கள் வந்து விடுதிகளில் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுங்குவார்சத்திரம் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் தங்கியுள்ள விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டது பெண் தொழிலாளர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்கள் சிலர் உயிரிழந்ததாக வதந்தி பரவ இதை அடுத்து செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகம் ஊதியத்துடன் கூடிய ஒருவார கால விடுப்பை அறிவித்திருந்தது.

இந்நிலையில் மூடப்பட்ட தொழிற்சாலை இன்னும்  சில தினங்களில் செயல்பட உள்ள நிலையில் பெண் தொழிலாளர்கள் தங்கியுள்ள விடுதிகளை ஆய்வு செய்ய தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் கோளிவாக்கம், கீழம்பி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண் தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஊரக தொழில் துறை அமைச்சர் தாமோதரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது பெண் தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளில் உள்ள அறைகளின் அளவுகளையும், உணவு உண்ணும் கூடங்களையும், சுகாதார வளாகங்களையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு ஆய்வு செய்தனர்.



பின்னர் பெண் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டுமென விடுதி காப்பாளர் களுக்கும் தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கும், ஆலோசனைகளை வழங்கினார்கள்.

ஆய்வின்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர், காஞ்சிபுரம் எம்பி. செல்வம், எம்எல்ஏ எழிலரசன் மற்றும் அரசு அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments