நாமக்கலில் 805 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!
நாமக்கல்
நாமக்கல் மாவட்ட ராசிபுரம், திருச்செங்கோட்டில் நடந்த அதிரடி சோதனையில் 805 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் உத்தரவின்பேரில் நகராட்சி சுகாதார அலுவலர்கள் நகரில் சின்னக்கடை வீதி, பெரியகடை வீதி, அண்ணா சாலை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வணிக நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 255 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 550 அபராதமாக விதித்து வசூல் செய்தனர்.
இந்த சோதனையில் நகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் லோகநாதன், சிவா, மணிவண்ணன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் பன்னீர்செல்வம், சேகர், முத்தமிழ்ச்செல்வன், ராஜேந்திரன், மேற்பார்வையாளர் பிரிதிவிராஜ், பரப்புரையாளர்கள் பிரகாஷ், ஜெகதீசன், வினோத்குமார், தங்கமணி ஆகியோர் ஈடுபட்டனர்.
அதேபோல, திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் கணேசன் தலைமையில் திருச்செங்கோட்டில் உள்ள பல்வேறு கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் வடக்கு ரதவீதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் ரகசிய அறையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் என 550 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் பிளாஸ்டிக் பைகள் விற்ற அந்த கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த சோதனையில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் குமரவேல் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.
No comments
Thank you for your comments