ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 5 புதிய புகார்கள்- 8 தனிப்படைகள்... விசாரணைக்கு உத்தரவு
விருதுநகர்:
ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன.
ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராஜ், முத்துப்பாண்டி ஆகியோர் மீது கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் போலீசார் தங்களை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமின் கேட்டு ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
Click here to more view 👆 about LVS EYE Hospital Facility |
இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவிட்டார். ஆனால் அதற்குள் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக்-அவுட் நோட்டீசு போலீஸ் தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் பலர் மோசடி புகார்களை அளித்து வருகின்றனர். அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது அவர் மீது மேலும் 5 புகார்கள் வந்துள்ளதாக விருதுநகர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
சிவகாசி சித்துராஜபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த தூயமணி மனைவி குணா, தனது மகனுக்கு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணி வாங்கி தரவேண்டி அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் நல்லதம்பி என்ற விஜயநல்லதம்பி, அவரது மனைவி மாலதி ஆகியோர் மூலம் ராஜேந்திரபாலாஜிக்கு ரூ.17 லட்சம் கொடுத்ததாக புகார் வந்துள்ளது.
மேலும் மதுரை வில்லாபும் காமராஜர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், மாநகராட்சி அலுவலக உதவியாளர் பணிக்காக சிவகாசி ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் கணேசன் மற்றும் ராஜேந்திர பாலாஜியிடம் ரூ.7 லட்சம் கொடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி ஜோசப்ராஜ், தனது நண்பர் தரணிதரனுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் வேலைக்காக முன்னாள் ஒன்றிய செயலாளர் நல்ல தம்பி என்ற விஜயநல்லதம்பி மூலம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை எதுவும் வாங்கி தரவில்லை என 3 பேரும் இணைய தளம் மூலமாக புகார் அளித்துள்ளனர்.
இதேபோல் மதுரை கோமதிபுரம் 6-வது தெருவைச் சேர்ந்த செல்வராஜ் தனது மகன் ஆதித்யனுக்கு ஆவினில் கிளை மேலாளர் வேலைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் மானகசேரியை சேர்ந்த பரமகுரு, கரூர் தாந்தோனி மலை முத்துச்சாமி, திருச்சி பிரின்ஸ் சிவக்குமார் ஆகியோர் மூலம் ராஜேந்திர பாலாஜியிடம் ரூ.16 லட்சம் கொடுத்துள்ளதாக புகார் வந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வெங்கடாசலம் தனது மகன் டாக்டர் பாலவிக்னேசுக்கு மருத்துவத்துறையில் பணி மாறுதல் பெற்று தருவதாக விஜயநல்லதம்பி மூலமாக ராஜேந்திர பாலாஜிக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளதாக மற்றொரு புகார் வந்துள்ளது. இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவிட்டுள்ளார்.
No comments
Thank you for your comments