தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை: இன்று 34வது அமர்வு இறுதிநாள் விசாரணை
தூத்துக்குடி, டிச-30
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான ஒருநபர் விசாரணை ஆணையத்தில் முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷ் ஆஜரானார்.
| தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணைக்காக ஒருநபர் ஆணையத்தில் ஆஜரான முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷ் |
தூத்துக்குடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கனவே நடந்த 33 கட்ட விசாரணையில் 1,031 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 1,346 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன.
இந்த மாதம் தொடக்கத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் 34-வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 27ம் தேதி தொடங்கியது.
இதில் முதல் நாள் விசாரணையில் நெல்லை மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளரும், தற்போதைய சென்னை குடியுரிமை பிரிவு அதிகாரியுமான அருண் சக்திகுமார் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தார்.
2-ஆம் நாள் விசாரணையில் ஆஜராக கோவை காவல் ஆணையர் பிரதீப்குமார், துணை காவல் ஆணையர் ஜெயச்சந்திரன், காவல் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், கோவை காவல் ஆணையர் பிரதீப்குமார், மற்றும் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஒரு நபர் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து 3-ஆம் நாள் விசாரணை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் புதன்கிழமை தொடங்கியது. இந்த விசாரணையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியரும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது பொறுப்பிலிருந்த மாவட்ட ஆட்சியருமான வெங்கடேஷ் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். நீதிபதி அருணா ஜெகதீசன் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்.
நீதிபதி அருணா ஜெகதீசன் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகிறார். ஒரு நபர் ஆணையத்தின் 34வது அமர்வு இறுதிநாள் விசாரணை இன்று நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் அதிகாரியாக பணியாற்றிய வீரப்பன் ஆஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments