22.12.2021 அன்று சார்பதிவக எல்லை மறுசீரமைப்பு தொடர்பாக கருத்துகேட்பு கூட்டம்
திருவள்ளுர், டிச.20-
திருவள்ளுர் வருவாய் மாவட்டத்தில், வருவாய் கிராமங்கள் மற்றும் அதன் குக்கிராமங்களை ஒரே சார்பதிவக எல்லைக்குள் கொண்டுவரும், சார்பதிவக எல்லை மறுசீரமைப்பு தொடர்பாக, பொதுமக்களின் கருத்துகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
மாண்பமை தமிழ்நாடு சட்டப்பேரவையில், முக்கிய வருவாய் கிராமம் மற்றும் அதன் குக்கிராமங்கள் வேறுவேறு சார்பதிவாளரின் அதிகார வரம்பில் அமைந்துள்ளதால் தானியங்கி பட்டா மாற்றம் போன்ற பதிவுத்துறை மற்றும் வருவாய்துறையின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு இடையூறாக உள்ளதனை களையும் நோக்கத்தோடு ஒரு வருவாய் கிராமம் முழுவதையும் ஒரே சார்பதிவக எல்லைக்குள் கொண்டு வரும் வகையில், சார்பதிவக எல்லைகள் சீரமைக்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டு, அதன்படி, அரசாணை எண் 147, வணிகவரி மற்றும் பதிவு (ஜி)த்துறை, நாள் 28.10.2021-ன்படி வெளியிடப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, திருவள்ளுர் வருவாய் மாவட்டத்தில், வருவாய் கிராமங்கள் மற்றும் அதன் குக்கிராமங்களை ஒரே சார்பதிவக எல்லைக்குள் கொண்டுவரும், சார்பதிவக எல்லை மறுசீரமைப்பு தொடர்பாக, உத்தேசமாக இணைக்கப்பட வேண்டிய குக்கிராமங்களின் பட்டியலானது தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகத்தில் விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது.
இப்பொருள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகேட்பு கூட்டம், திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 22.12.2021 அன்று முற்பகல் 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
எனவே, தொடர்புடைய கிராம பொதுமக்கள் இக்கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துக்கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்கள்.
No comments
Thank you for your comments