Breaking News

தொடர்ந்து மழைநீர் வடிகால் அமைப்புகள் ஆய்வு - அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவை, நவ.18-

கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் உள்ள வாலாங்குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், இரயில்நிலையத்தில் நடைபெற்று வரும் கொரோனா தொற்று தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளதை  பார்வையிட்டார்.

பின்னர்  அமைச்சர்  செந்தில்பாலாஜி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வடகிழக்கு பருவமழை முன்னேற்ப்பாட்டு பணிகள் தொடர்பாக திட்டமிட்டு பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார்கள்.

அதன்படி,  கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னேற்ப்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 27 குளங்களில் 26 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன. ஒரு குளம் 50சதவீதம் அளவு நிறைந்துள்ளது. மழை பொழிவு அதிகமாக இருக்கும் காரணத்தினால், தொடர்ந்து மழைநீர் வடிகால் அமைப்புகளை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.  வாலாங்குளத்தில்  இக்குளம் முழுமையாக நிரம்பி உள்ளது. இக்குளத்தில் தண்ணீர் வெளியேறும் குழாய் மிக குறுகலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை சீரமைத்து குழாய் மாற்றி அமைக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 மாவட்டத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் நீரை அகற்றும் பணியும்,7 பள்ளிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை மோட்டார் கொண்டு அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. மழையின் காரணமாக இதுவரை எவ்வித மின்விநியோக தடையும் ஏற்படவில்லை. இனிவரும் நாட்களில் மின்சார தடை ஏற்பட்டால், மின்தடைக்கான காரணம் உடனடியாக கண்டறியப்பட்டு, மின்விநியோக சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் அலுவலர்களால் விரைவாக மேற்கொள்ளப்படும்.

கடந்த 30ஆம் தேதி தொடங்கி நேற்று  வரை 150 இடங்களில் மக்கள் சபை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளன. மக்கள் சபை நிகழ்ச்சியின் மூலம் 1,41,000 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் அனைத்தும் துறைவாரியாக பிரிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அதற்கான மதிப்பீடுகளும் செய்யப்பட்டு, விரைவாக பணிகள் மேற்கொள்வதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  மாவட்டத்தில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் . வடகிழக்கு பருவமழை தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்கள், அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டவர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆய்வுகூட்டங்களை நடத்தி, எடுக்கப்படவேண்டிய முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டி நெறிமுறைகளை ஒவ்வொரு துறைக்கும் வழங்கி உள்ளார். 

மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ் சமீரன் தலைமையில் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுக்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாகதான் கடந்த காலங்களில் பெய்த மழை அளவைவிட தற்போது பெய்த மழையின் அளவு அதிகமாக இருந்தும், பெரியதாக எவ்வித பாதிப்பும் ஏற்படாதவகையில், அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்   மாநகராட்சி ஆணையாளர் திரு.ராஜகோபால் சுன்கரா  , மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments