கோதவாடி குளத்திற்கு பிஏபி வாய்க்கால் வழியாக உபரிநீர் வரத்து அதிகரிப்பு...
கோவை:
கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளத்திற்கு தற்போது பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் உபரிநீர் வழங்கப்பட்டுள்ளது.
இந்த குளத்தில் 11 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கிவைக்க முடியும். தற்போது கோதவாடி குளத்தில் 2 மில்லியன் கன அடிக்கு மேல் வந்துள்ளது.
கோதவாடி குளத்தில் தேங்கியுள்ள தண்ணீரை காண்பதற்கு கோதவாடி குளக்கரையை சுற்றி உள்ள சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள், விவசாயிகள் தினசரி வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கோதவாடி குளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் விதவிதமான பறவைகள் கோதவாடி குளத்திற்கு வர தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த குளத்தில் கோதவாடியை சேர்ந்த கார்த்தி என்ற விவசாயி ஆழியார் மீன் பண்ணையில் இருந்து 2 ஆயிரம் மீன்குஞ்சுகளை வாங்கினார். பின்னர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மீன்குஞ்சுகள் கோதவாடி குளத்தில் விடப்பட்டது.
இந்நிலையில், கோவை கிணத்துக்கடவு ஒன்றியம் கோதவாடி குளத்திற்கு பிஏபி வாய்க்கால் தண்ணீர் வந்து கொண்டுருப்பதை, திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளரும், கால்நடை ஆராய்ச்சி மையம் நிறுவனர் கார்த்திகேயன் சிவசேனாபதி, துணை செயலாளர் மணிசுந்தரம், மாவட்ட செயலாளர் டாக்டர். வரதராஜன், வடக்கு, ஒன்றிய செயலாளர் கிரி கதிர்வேல், தெற்கு, ஒன்றிய செயலாளர் துரை, மாவட்ட ஒன்றிய கிளைக்கழக நிர்வாகிகள்,கோதவாடி ஊராட்சித் தலைவர் கே.ஆர் ரத்தினசாமி மற்றும் விவசாயிகள், பொதுமக்கள், குளம் பாதுகாப்பு அமைப்பை சார்ந்தவர்களும் திரளாக கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
மேலும் மாநில செயலாளர் கூறுகையில் தற்காலிகமாக தண்ணீர் விட்டு குளத்தை நிரப்ப ஏற்பாடு செய்வதாகவும், ஆனைமலை - நல்லாறு திட்டம் நிறைவேற பாடுபடுவதோடு நொய்யல் தண்ணீரை கொண்டுவர முயற்சிப்பதாகவும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments