Breaking News

மரணம் என்பது ஒன்றுமில்லை...!

 மரணம் என்பது ஒன்றுமில்லை 

என்றும் இல்லாத நிரந்தர உறக்கம்

கனவுகளும் இல்லை கண்ணீரும் இல்லை.. 

கண் இமை திறக்க வழியுமில்லை... 

திறந்தாலும் ஏற்றுக்கொள்ளும் 

மனநிலையில் மனிதன் இல்லை....!


துயில் எழ முடியாது... 

தூக்கம் கலையாது...

துணைக்கு யாரும் கிடையாது...

ஊண் உணர்வு ஏற்காது.... 

ஒன்றுமில்லை மரணம் நிதர்சனம்...!


இருக்கும்போது இரைதேடி

இறந்த பின்னே இரையாகும்  இயல்பு இது

கடவுளை தேடியவன்  - கடவுளை 

கடைசிவரை காணாமலே 

கடவுளாகும் கணம் அது


மரணம் என்பது ஒன்றுமில்லை 

மனித சரீரம் அழிவதற்கான ஆரம்பம்.... 

ஈரம் இருக்கும் எதுவும் அழுகிப்போகும்

ஈரமற்ற  நெஞ்சம் கொண்ட  உறவுகளைப் போல


மரணம் என்பது ஒன்றுமில்லை 

அடுத்து வரும் உயிர்களுக்கான

ஆண்டவன் கொடுக்கும் இட ஒதுக்கீடு

மரணம் என்பது ஒன்றுமில்லை 

நான் எனது என்ற எண்ணம் இல்லாத நிலை


மரணம் என்பது வேறொன்றுமில்லை

நமது வாழ்க்கை பயணத்தின் கடைசி நிறுத்தம்

சொர்க்கம் நரகம் என்று  சொன்னாலும் நம்பாதே.... 

சூடு சொரணை இருக்கும்போதே 

அதை உணராமல் வாழ்ந்த நமக்கு 

இறந்த பிறகு  உறைக்கவா போகிறது உனக்கு....


மரணம் என்பது ஒன்றுமில்லை 

நமது வாழ்க்கைக்கான முடிவுரை 

நமது வாழ்க்கை வரலாற்றுக்கான  முகவுரை

மரணம் என்பது ஒன்றுமில்லை 

மரணம்  சனனத்திற்கான கடைசி சான்று...

🔏 ஆற்காடு க. குமரன்

No comments

Thank you for your comments