நாமக்கல்லில் வாரம் ஒரு நாள் காவலர்களுக்கு ஓய்வு திட்டம் அமல்!
நாமக்கல், நவ.29-
வெயில் மழை கொரோனா என எதற்கும் சளைக்காமல் போராடும் காவல் துறையினருக்கு வார ஓய்வு திட்டம், நாமக்கல் மாவட்டத்திலும் அமலுக்கு வந்துள்ளதால் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவல்துறையினர் தங்கள் உடல் நலனை பேணிக்காக்க ஏதுவாகவும், அவர்கள் தங்களின் குடும்பத்தாருடன் போதிய நேரத்தை செலவிடுவதற்கும், வார விடுமுறை கட்டாயம் அளிக்க வேண்டும். மேலும், போலீசாரின் பிறந்த நாள், திருமண நாட்களில், அவர்களின் குடும்பத்தாருடன் கொண்டாடி மகிழ, அந்த இரு நாட்களிலும் விடுமுறை வழங்க வேண்டும் என, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், மாநிலம் முழுவதும் தற்போது போலீசாருக்கு வார ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் 37 காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., தலைமை காவலர், காவலர் என, மொத்தம், 1,260 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களில், தலைமை காவலர் மற்றும் காவலர்கள், 700க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த வார விடுமுறை, தலைமை காவலர் மற்றும் காவலர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது, நாமக்கல் மாவட்டத்தில், அமலுக்கு வந்துள்ள நிலையில் முதல்கட்டமாக, 112 காவல்துறையினருக்கு வார ஓய்வு அளிக்கப்பட்டது.
அடுத்த 105 பேருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இவ்வாறு தினமும் 100 காவல்துறையினருக்கு வார ஓய்வு என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments
Thank you for your comments