மத்திய குழு வெள்ள பாதிப்புகளை இன்று ஆய்வு
சென்னை, நவ.22-
தமிழகத்தில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச் செயலாளர் தலைமையில் மத்திய அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழு ஞாயிற்றுக்கிழமை (21/11/2021) சென்னைக்கு வந்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. நீர் நிலைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் என பெரும்பாலான மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்தது. பயிர்கள் நீரில் மூழ்கின. சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன.
எனவே உடனடி நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.550 கோடியும், முழுமையான நிவாரணமாக ரூ.2,079 கோடியும் வழங்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இதற்கிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் மத்திய மந்திரி அமித்ஷாவும் தொலைபேசியில் பேசி வெள்ள நிலைமை பற்றி கேட்டறிந்தார். அதன்படி, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் மத்திய அதிகாரிகள் குழு ஒன்று சென்னை வந்துள்ளது.
இந்த குழுவில் விவசாயம், நிதி, நீர்வளம், மின்சாரம், போக்குவரத்து, ஊரக வளர்ச்சித்துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
மத்திய குழு உறுப்பினர்கள் 2 பிரிவாக பிரிந்து சென்று வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
திங்கள் கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாள்கள் ஆய்வு நடத்த இருக்கின்றனர்.
அதன் பின்னர், நவம்பர் 24ம் தேதி புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார்கள். கூடுதல் விவரங்கள் தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளனர்.
முதல் குழு இன்று, திங்கள் கிழமை (22/11/2021) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் நாளை செவ்வாய்கிழமை கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய இருக்கின்றது.
2&வது குழு இன்று திங்கள் கிழமை நேரடியாக குமரி மாவட்டம் செல்கிறது. குமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை அவர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள்.
நாளை செவ்வாயன்று வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஆய்வு செய்துவிட்டு சென்னை திரும்பத் திட்டமிட்டுள்ளனர்.

No comments
Thank you for your comments