டெஸ்ட் ஃபர்ஸ்ட்! ரெஸ்ட் நெக்ஸ்ட்!! -வெளிநாடு சென்று திரும்பியோருக்கு அறிவுரை!
நாமக்கல் :
நாமக்கல் மாவட்டத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியோா் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என ஆட்சியா் ஸ்ரேயாசிங் அறிவுறுத்தி உள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில்...
கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்துவந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தினசரி தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் ஒரு மாதமாக அதிகரித்து வருகிறது. இந்தப் பாதிப்பை ஏற்படுத்தி வருவது இரண்டாம் அலையை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனா தீநுண்மி எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் எனும் புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது டெல்டா வகை கொரோனாவை விட மிகவும் வீரியமானதாக இருக்கும் எனவும், இதனால் ஏற்படும் நோய்த் தொற்று வேகமாகப் பரவி அதிக உயிரிழப்புகள் நிகழக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்த ஒமைக்ரான் எனும் உருமாறிய கொரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்கள் 14 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளனா். உலக சுகாதார மையத்தின் எச்சரிக்கையை அடுத்து பல நாடுகள் தங்கள் சா்வதேச விமான சேவையை நிறுத்தியுள்ளனா். மேலும், இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை மூடியுள்ளனா்.
இந்திய அரசின் அறிவுறுத்தலின்படி நமது மாநிலத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென்ஆப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரிசீயஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூா், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கும் விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
இதில் கொரோனா தொற்று இல்லை என்றால் அவா்கள் தங்கள் வீட்டிலேயே ஒருவார காலம் தனிமைப்படுத்திக் கொண்டு எட்டாம் நாள் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். விமான நிலைய பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியானோா் உடனடியாக சிறப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு அவா்கள் உருமாறிய ஒமைக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனரா❓ என கண்டறியப்படும்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோருக்கு நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவா்களிடையே தீவிர நோய் தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, நாமக்கல் மாவட்டத்தில் இன்னும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
கடந்த இரு வாரங்களில் வெளிநாட்டிலிருந்து வந்தவா்கள் அனைவரும் தாமாக முன்வந்து அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இதுதொடா்பாக சந்தேகங்கள் மற்றும் புகாா்கள் அளிக்க 8220402437 என்ற மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு தொலைபேசி எண்ணை அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments