மற(றை)ந்து போனமாசில்லா மாவளி கொண்டாட்டம்
காஞ்சிபுரம்:
ஆதி தமிழர்களின் வழிபாட்டு முறை என்பது இயற்கையையும் மறைந்த முன்னோர்களையும் மட்டுமே வணங்கி வழிபடுவதாக இருந்தது புராணம் இதிகாசம் கட்டுக்கதைகள் இவற்றைக் கொண்டு திருவிழா நடத்துவது கொண்டாடுவது என்பது பிற்காலத்தில் இடைச்செருகலாக வந்த நடைமுறையை ஆகும்.
கார்த்திகை மாதம் தீபங்கள் ஏற்றி வழிபடும் முறை என்பது இயற்கை சக்தியான நெருப்பு சக்தியை கொண்டாடுவது எனக் கொள்ளலாம்.அதனால்தான் இன்றைக்கும் விளக்கேற்றுதல் என்பது ஒரு மங்கல குறியீடாகவே பல சடங்குகள் வாழ்வியல் முறைகளில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கார்த்திகை தீப திருவிழா குறித்த குறிப்புகள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கிய நூல்களில் இருந்தே நமக்கு தரவுகள் ஆதாரங்கள் கிடைக்கின்றன இயற்கையை கொண்டாடுவதன் மூலம் இறைவனை காண்பது நம் தமிழர் மரபு அதனால்தான் இறைவனை வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் எங்கும் நிறைந்திருக்கிறான் இறைவன் எனக் கூறினார் கள்.
சைவ சமயம் மேலோங்கியிருந்த காலத்தில் ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதி இருக்கின்றான் இறைவன் ஈசன் என்று திருவெம்பாவையில் மாணிக்கவாசகர் கூறுகிறார்.
கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதற்கொண்டு மாதம் முழுவதும் வீட்டு முகப்பில் உள்ள மாடத்தில் குறைந்து இரு விளக்குகளாவது ஏற்றுவார்கள். இம்மாத முழு பவுர்ணமியான கார்த்திகைத் திருநாளன்று வீடு வாசல் சுற்றுச்சுவர் மாடி தோட்டம் குப்பைமேடு வணிக நிறுவனங்கள் நீர்நிலைகள் என தனது பயன்பாட்டில் உள்ள இடங்கள் அத்தனையிலும் வரிசையாக அகல் விளக்கு தீபம் ஏற்றி கார்த்திகை தீபவிழா கொண்டாடுவார்கள் அன்று ஊர் பொதுவிலோ அல்லது ஆலயங்களிலோ சொக்கப்பனை கொளுத்துவார்கள் பண மரம் போன்ற பெரிய மரத்தை நட்டு வைத்து அந்த மரத்தின் நான்குபுறமும் பனை ஓலைகளை கட்டி வைத்து சுற்றி கட்டி பின்பு அதனை கொளுத்தி சொக்கன் ஆகிய ஈசனை ஆதியும் அந்தமும் இல்லாத நெருப்பாக வழிபடுவார்கள் இதற்கு சொக்கப்பனை என்று பெயர்.
அதன்பிறகு சிறுவர்கள் முதல் இளைஞர்கள் பெரியவர்கள் என குடும்பத்தில் பெண்கள் உட்பட அனைவரும் மாவளி சுற்றி கொண்டாடி மகிழ்வார்கள் அப்படி சுற்றும் பொழுது பூக்கள் போல தீப்பொறிகள் வட்டம், நீள்வட்டம் என அழகாக காற்றின் திசை யோடு இணைந்து கொட்டும் இன்னும் சில இளவட்டங்கள் எட்டு வடிவிலோ பல வடிவங்களில் தன் திறமைகளுக்கு ஏற்ப சுற்றுவார்கள் அதிலும் குறிப்பாக சிலம்பகலை தெரிந்தவர்கள்.. மிக திறமையாக விதம்விதமான கோலங்களில் சுற்றுவார்கள் அதிலிருந்து தீப்பொறி பூக்கள் பல வடிவங்களில் விதம்விதமாக பறந்து விழுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் இதை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும்.
இப்படி மாவலி சுற்றுபவர் கதாநாயகன் நிலைக்கு உயர்ந்து பார்க்க படுவார் இன்னும் அவருடைய முறை பெண்கள் இருந்தால் சொல்லவே வேண்டாம்....
விளையாட்டும் வேடிக்கையும் கேலியும் கிண்டலும் நக்கலும் நையாண்டியுமாய் களைகட்டும் அந்த இடம்
இப்படி
சுற்றும் பொழுது மாவளியோ மாவளி
மாவளி காரன் பொண்டாட்டி மாவுஇடிக்க போனாலாம்
இடிச்ச அரிசிமாவுல
எட்டுருண்ட செஞ்சாலாம்
எனக்கு ரெண்டு தந்தாலாம்
என்று ராகமாக பாட்டு பாடிக்கொண்டே சுற்றுவார்கள்
மாவளி சுற்றுப வர்களின் மாமன் மகள் அத்தை மகள் போன்ற முறை பெண்கள் இருந்தால் அவர்களை வம்புக்கு இழுக்கும்படியும் வார்த்தைகளை அமைத்து பாட்டுப் பாடுவார்கள்..
அது ஒரு அற்புதமான கேளிக்கை பொழுதுபோக்கு விளையாட்டாகும் இதை கார்த்திகை தீபத்திருநாள் அன்று தொடங்கி அடுத்த இரண்டு நாட்கள் மாவளி சுற்றி கொண்டாடுவார்கள்.
மா + ஒளி =மாஒளி
மா என்றால் அழகு என்றும் ஒரு பொருள் உண்டு ஒளி என்றால் வெளிச்சம் என்றும் ஒரு பொருள் உண்டு அழகிய வெளிச்சங்களை தருவதால் இது மாஒளி என்றழைக்கப்பட்டது
பின்பு நாளடைவில் மருவி மாவளி என்று மாறி இருக்க வேண்டும்
தென்மாவட்டங்களில் இதற்கு கார்த்திகை என்று அழைக்கிறார்கள்
இப்படி மாவளி சுற்றுவதால் உடலுக்கு ஆரோக்கியமும் மனதிற்கு மகிழ்ச்சியும் மாசு இல்லாததால் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்போமாக உள்ள திருவிழாவாக அமைந்துவிடுகிறது.
மாவளி எப்படி தயார் செய்வது?
அது சரி இப்பொழுது மாவளி எப்படி தயார் செய்வது என்பதை பார்ப்போம் கார்த்திகை மாதம் மழைக்காலம் என்பதால் ஒரு வாரத்திற்கு முன்பாகவே திட்டமிடப்பட்டு ஆண் பனை மரங்களில் உள்ள பூக்களை சேகரிப்பது தொடங்கிவிடவேண்டும். இதை வடமாவட்டங்களில் வண்ணாங்காய் என்று சொல்வார்கள் இதை எரித்து பயன்படுத்தும்பொழுது வண்ணங்கள் நிறைந்த பூக்கள்போன்று தருவதால் இதை வண்ணம் தரும்காய் என்று அழைத்திருக்க வேண்டும் பின்பு மருவி நாளடைவில் வண்ணாங்காயாக மாறியிருக்க வேண்டும் என கருத வேண்டியுள்ளது.
சேகரித்த அந்த பனம்பூக்களை உலர்த்தி காய வைத்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும் பின்பு தேவைக்கு ஏற்ப ஒரு குழியைத் தோண்டி அதில் இந்த பனம் பூக்களை செங்குத்தாக நிற்க வைத்து தீ வைத்து கொளுத்தி விட வேண்டும் தீக்கங்குகள் நன்றாக வந்தவுடன் அதற்குத் தேவையான பதமான நெருப்பு இருக்கும்பொழுது அந்த குழியின் மீது குச்சிகள் அடிக்கி அந்த குச்சிகளின் மேலே பூசனிஇலைஅல்லது பனையோலை பரப்பி அடுக்கி வைத்து அதன் மேல் மண் போட்டு காற்று உள்ளே புகா வண்ணம் மூடிவிடவேண்டும்.
இதற்க்கு மூட்டம் போடுதல் என்று பெயர்... சுமார் 8 மணி நேரம் கழித்து மண்ணை அகற்றி அந்த குழியில் எரிந்த பனம் பூக்கள் அந்த வடிவத்திலேயே செங்குத்தாக எரிந்து கரி யாய்நிற்கும் அதை எடுத்து உலர்த்த வேண்டும் பின்பு அதை அம்மியில் நன்றாக மைய அரைத்து மீண்டும் அதை காயவைத்து தேவைக்கேற்ப அந்த பணம் பூ மாவை எடுத்து தேவையான அளவு பருத்திநூல் துணிகளை வெட்டி எடுத்து அதில் கொட்டி பந்து போலவோ அல்லது குழாய் போல நீண்டு உருட்டி கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் சிலர் அந்த அரைத்த பனம்பூ மாவுடன் வரகு அரிசிஉமி அல்லது நெல் உமியை சேர்த்து வைத்து கட்டுவார்கள் இதனால் கூடுதலாகவும் பெரியதாகவும் தீப்பொறிகள் காற்றில் வண்ணமயமாய் விழும்
பின்பு பனை மரத்தில் உள்ள மட்டைகளை வெட்டி எடுத்து வந்து அதன் இருபுறங்களிலும் உள்ளே கூர்மையான பகுதிகளான கருக்குககளை சீவி மட்டையின் முனைப்பகுதியை மூன்று பகுதியாக வெட்டி அதன் இடையில் அந்த பணம்பூ மாவு துணிபந்தை வைத்து மட்டையின் காம்பை கட்டி விட வேண்டும்.
பனமட்டை கைப்பிடியில் இரண்டு குழிகளை சிறிய அளவில் செதுக்கி அதில் கயிறு கட்டி வைத்துக் கொண்டால் மாவளி தயார்.
பின்பு கார்த்திகை தீபம் மாலை வேளையில் இருட்டத் தொடங்கியதும் மாவலியின் துணி பந்தில் நெருப்பு பற்ற வைத்து சிறிது நேரம் நன்குஎரிந்த உடன் அதை அணைத்து விட வேண்டும். அந்த துணி பந்தில் வாய் வைத்து ஊதினால் அல்லது இப்படியும் அப்படியும் வேகமாக அசைத்தால் தீப்பொறிகள் பறக்கத் தொடங்கும் இதுதான் மாவலி சுற்றுவதற்கு தயாராகி விட்டது என்பதற்கான அறிகுறியாகும்.
இப்போது மாவலியை கயிறை பிடித்துக்கொண்டு தலைக்குமேல் வட்டம் நீள்வட்டம் என்று விருப்பத்திற்கேற்ற பலவித வடிவங்களில் சுற்றினால் காற்றோடு இணைந்து அழகிய தீப்பொறிகள் பூக்கள் போல சிவப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணங்களில் கொட்டிக் கொண்டிருக்கும் இதை பார்ப்பது கண்கொள்ளா காட்சி ஆகும்.
பெரும்பாலான கிராமங்களில் எல்லோரும் அவரவர் வீடுகளிலேயே சொந்தமாக தயார் செய்துகொள்வார்கள் நகரங்களில் விற்பதை வாங்கி பயன்படுத்துவார்கள்.
குடும்பத்தில் உள்ள எல்லோரும் இந்த மாவலியை சுற்றுவார்கள் கைக்குழந்தையாக இருந்தால் அதை இடுப்பில் வைத்துக்கொண்டு ஒரு சுற்று சுற்றாவது சுற்ற வேண்டும் அப்படி சுற்றினால் தீமை விலகி நன்மை பெருகும் என்கிற நம்பிக்கை உள்ளது.
தமிழ்நாட்டின் மரமான பனைமரப் பூக்களை கொண்டு அதன் மட்டையைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத உடலுக்கும் மனதிற்கும் சமூகத்திற்கும் மகிழ்ச்சியைத் தந்து கொண்டிருக்கின்ற இந்த கேளிக்கை விளையாட்டு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மறந்தும் மறைந்தும் வந்து கொண்டிருக்கிறது
உண்மையில் இந்த மாவளி விளையாட்டு மூலம் பனைமரங்கள் காப்பாற்றப்படுகிறது இயற்கையை நேசிக்க வேண்டும் என்கிற எண்ணம் சிறுவர்களுக்கு ஏற்படுகிறது பணம் பூவை தயாரிக்கும் விதம் மறைமுகமாக ஒரு தொழில்நுட்பத்தை குழந்தைப் பருவத்தில் ஆழமாக பதிய வைக்கிறது அவற்றை தயாரித்து பயன்படுத்துவதால் சிறுவர்களுக்கு தன்னம்பிக்கையும் சிறுதொழில் வாய்ப்பாகவும் அமைந்துவிடுகிறது. இப்படி பன்முக பயன்பாட்டில் உள்ளது இந்த கார்த்திகை தீப மாவளி கேளிக்கை விளையாட்டு.
கடந்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது அப்போது அரசாங்கம் பட்டாசு வெடித்து கொண்டாடுவதால் சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை நமது மாநிலத்தில் குறிப்பிட்ட நேரத்தில்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் உள்நாட்டு பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் என்றும் எந்த அளவு டெசிபல்ஒலி பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று பல்வேறு விதிமுறைகளை வகுத்தார்கள் அப்படி இருந்தும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்து கொண்டிருக்கிறது ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு தயாரிக்கும் போதும் தீபாவளி பண்டிகையில் அதை வெடிக்கும்பொழுதும் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் பல உயிர்பலிகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இப்படி மண்ணையும் மக்களையும் மக்களின் உயிரையும் பாதிக்கின்ற இந்த பட்டாசு வெடிக்கும் கேளிக்கை விளையாட்டு அவசியமா என்கிற எண்ணம் ஏற்படுகிறது.
தீபம் +ஆவளி அதுதான் தீபாவளி
தீபம் +ஆவளி அதுதான் தீபாவளி தீபங்கள் வரிசையாக ஏற்றப்படுவது அதுதான் தீபாவளி ஆக கார்த்திகை தான் உண்மையான தமிழர்களின் தீபாவளி என்கிற ஒரு கருத்தும் உள்ளது நாம் பட்டாசு வெடித்து கொண்டாடும் தீபாவளி என்பது என்பது தமிழர்களின் பண்டிகை அல்ல என்றும் ஒரு கருத்து நிலவி கொண்டிருக்கிறது அதுகுறித்து விரிவாக பிறகு பார்ப்போம்.
தமிழர்கள் கொண்டாடும் கார்த்திகை தீப திருவிழா அதனையொட்டி நடைபெறும் மாவளி சுற்றும் கேளிக்கை விளையாட்டு ஆகியவை இயற்கையை நேசிக்கும் பண்பாட்டை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது
ஆனால் இன்றைய இளம் தலைமுறை அதை மறந்து பரபரப்பான உலகில் கணினி அலைபேசி ஆன்லைன் விளையாட்டுக்களில் தனது அறிவை ஆரோக்கியத்தை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கும் அபாய சூழலில் பயணித்துக் கொண்டிருக்கிறது... இந்நிலை மாற வேண்டும்..
நல்ல சமூக அமைப்பை தொடர்வதற்கு மாவளி போன்ற பாரம்பரியமிக்க கேளிக்கை விளையாட்டுகள் மீட்டெடுக்கப் படவேண்டும்.
இந்த மன்னை காக்கின்ற
மரவளர்ப்பை உணர்த்துகின்ற
சுற்றுச்சூழலை பாதிக்காத
உடலிற்கு ஆரோக்கியத்தையும்
மனதிற்க்கு மகிழ்ச்சியையும்
சமூக ஒற்றுமையையும் தருகின்ற
இதுபோன்ற திருவிழா கேளிக்கை விளையாட்டு குறித்து இன்றைய இளம் தலைமுறை இடத்தில் கொண்டு செல்வோம்
பசுமையான உலகிற்கு வழிவகை செய்வோம்
நல்லதொரு சமுதாயத்தை கட்டமைப்போம்
என்று மாவளியை குறித்து தெரிவித்துள்ளார் கொற்றவை ஆதன், தலைவர் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையம் .





No comments
Thank you for your comments