Breaking News

இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தூக்கி வீசிய காட்டு எருமை

 கிருஷ்ணகிரி :

தேன்கனிகோட்டை அருகே  இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மகனை தூக்கி வீசிய காட்டு எருமை... பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

தேன்கனிகோட்டை அருகே மருத்துவமனைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய தந்தை மகனை காட்டு எருமை கடும் ஆக்ரோஷத்தில் முட்டி தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகேயுள்ள ஜவளகிரி அடுத்துள்ள நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அனுமந்தப்பா (48) இவரது மகன் குமார் (26) அனுமந்தப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாததால்  அவரது மகன் குமார் இருசக்கர வாகனத்தில் அவரை ஜவளகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். 

பின்னர் அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் மீண்டும் தங்களது கிராமத்திற்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அப்போது ஜல்லி மாரியம்மன் கோயில் என்ற இடத்தில் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது காட்டுப்பகுதியில் புதருக்குள் ஒளிந்திருந்த காட்டுஎருமை ஒன்று கடும் ஆக்ரோஷத்தில் இருசக்கர வாகனத்தோடு சேர்ந்து தந்தை மகன் இருவரையும் முட்டி தூக்கி வீசியுள்ளது. இதில் அனுமந்தப்பா, குமார் ஆகிய இருவருக்கும் தோள்பட்டை முதுகு, தலை, உடல் பகுதி என அனைத்து இடங்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

கடும் ஆக்ரோஷத்தில் நின்ற காட்டு எருமை அங்கிருந்து சிறிது நேரத்தில் காட்டுக்குள் ஓடி மறைந்தது. 

இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் ஜவளகிரி வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த  ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு மருத்துவமனையில் இருவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனைத்தொடர்ந்து இருவரும் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து ஜவளகிரி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments