மழை நீர் அடைப்பு, மின்சாரப் பிரச்னைகளை நீங்களே சரி செய்ய முயன்று ஆபத்தில் சிக்காதீர்...!
சென்னை, நவ.11-
மழை நீர் அடைப்பு, மின்சாரப் பிரச்னைகளை நீங்களே சரி செய்ய முயன்று ஆபத்தில் சிக்காதீர்.. காவல் ஆணையர் எச்சரிக்கைமழை நீர் அடைப்பு, மின்சாரப் பிரச்னைகளை நீங்களே சரி செய்ய முயன்று ஆபத்தில் சிக்காதீர் என்று காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் மழை நீர் அடைப்பு மற்றும் மின்சாரப் பிரச்சனைகளுக்கு அவசர உதவி எண்ணை தொடர்புகொண்டு தீர்வு காண வேண்டும் எனவும் அவர்களே அதைச் செய்ய முயன்று ஆபத்தில் சிக்கக்கூடாது எனவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையம் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குடியிருப்பு வளாகத்துக்குள் மழை நீர் புகுந்து காவலர் குடும்பத்தினர் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர். இதனையடுத்து அப்பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மோட்டார்களைப் பயன்படுத்தி தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் துரித நடவடிக்கைகளை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் ஆய்வு மேற்கொண்டதுடன், காவலர் குடும்பத்தாருக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கி குறைகளைக் கேட்டறிந்தார்.
இதற்கிடையே செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இக்குடியிருப்பில் வசிக்கும் 392 குடும்பங்களுக்கும் தேவையான நிவாரணங்கள் வழங்கப்பட்டு, நீரை வெளியெற்றவும், தடை செய்யப்பட்ட மின்சாரத்தை மீண்டும் வழங்கவும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். மேலும், மந்தைவெளி, கொண்டிதோப்பு போன்ற காவல் குடியிருப்புகளிலும் மழை நீர் தேக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அனைவரது பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்து, கோரிக்கையின்படி பிரச்சனைகளை நிரந்தரமாகத் தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் எனவும் அவர் உறுதியளித்தார்.
அதுமட்டுமல்லாமல் சென்னையில் காவல்துறை சார்பில் ஒரு காவல் மாவட்டத்திற்கு 10 பேர் கொண்ட குழுவும், பேரிடர் மீட்புத்துறையில் கமாண்டண்ட் தலைமையில் 35 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இக்குழுக்களானது பாதிக்கப்படக்கூடிய இடங்கள், போக்குவரத்து சீரமைப்பு, நிவாரண உதவிகள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தேவையின்றி பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், பொதுமக்கள் மழை நீர் அடைப்பு மற்றும் மின்சாரப் பிரச்சனைகளுக்கு அவசர உதவி எண்ணை தொடர்புகொண்டு தீர்வு காண வேண்டுமே தவிற அவர்களே அதைச் செய்ய முயன்று ஆபத்தில் சிக்கக்கூடாது எனவும் அவர் எச்சரித்தார்.
மேலும், ஆற்றோரம் வசித்து வரக்கூடிய பொதுமக்களைக் கண்டறிந்து அவர்களை நிவாரண முகாம் உள்ளிட்ட பிற இடங்களில் தங்கவைத்து வருவதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை துரிதமாக செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், 112 என்ற அவசரகால உதவி எண்ணிற்கு நாளொன்றுக்கு 100-120 அழைப்புகள் வரை வந்துகொண்டிருப்பதாகவும், அதில் மின்சாரம் துண்டிப்பு உள்ளிட்ட மீட்புப் பணிகள் சம்பந்தமான அழைப்புகளே அதிகப்படியாக வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments