புல்லூர் தடுப்பணையில் நீர் வரத்து அதிகரிப்பு
ஆம்பூர், நவ.10-
வாணியம்பாடி அருகே புல்லூர் தடுப்பணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் தடுப்பணை, ஏரி, கால்வாய்கள் நீர் நிரம்பி நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தை ஒட்டியுள்ள கர்நாடகா ஆந்திரா மாநில எல்லை பகுதிகளிலும், வாணியம்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பாலாற்றின் குறுக்கே பொகிலிரேவ், கங்குந்தி, நூல்குண்டா உள்ளிட்ட 29 இடங்களில் ஆந்திரா அரசு கட்டியுள்ள அனைத்து தடுப்னைகள் நிரம்பி வெளியாகும் உபரி நீர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள புல்லூர் என்ற இடத்தில் சுமார் 12 அடி உயரத்தில் ஆந்திரா அரசு கட்டியுள்ள தடுப்பணை நிரம்பி தமிழக பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
இதனால் வாணியம்பாடி சுற்றியுள்ள அம்பலூர், உதயேந்திரம், மேட்டுப்பாளையம், திம்மாம்பேட்டைஉள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றங்கரையோர மக்களுக்கு பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வருவாய்துறை சார்பில பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடபட்டு உள்ளது.
மேலும் கடந்த ஒரு மாத காலமாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால் நீர் நிலைகள் நிரம்பி காணப்படுகிறது. வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments
Thank you for your comments