Breaking News

பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள்... நாள்தோறும் குவியும் புகார்கள்


Click Here => Join the Telegram
Follow @ Google News


சென்னை, நவ.23-

அன்மை காலமாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாலியல் சீண்டல்கள் அதிகரித்துவருகிறது. தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள் என வேறுபாடின்றி பாலியல் சீண்டல்கள் அரங்கேறுகின்றன.  பாலியல் சீண்டல்களால் தற்கொலைகள் தொடர்கதையாக உள்ளது... என்று பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் வேதனையையும், பயத்தையும் தெரிவித்துள்ளனர். எங்கே  செல்கிறது சமூதாயம் என்ற மிகப்பெரிய கேள்வி நம்முன் எழுகிறது...


14417 இலவச உதவி மையத்துக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்தது. பாலியல் சார்ந்த புகார்கள் அதிகளவு வருகின்றன.

தமிழக பள்ளி கல்வித்துறையில் மாணவர்களுக்கு தேவையான தகவல்கள் மற்ற ஆலோசனைகளை வழங்குவதற்காக 2018-ல் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் கல்வி வழிகாட்டி உதவி மையம் தொடங்கப்பட்டது.

இந்த மையத்தை 14417 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண் மூலம் 24 மணி நேரமும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். தனியார் பள்ளிகள் மீதான கல்வி கட்டண புகார்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.



இந்த நிலையில் கோவையில் பாலியல் தொந்தரவால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை 14417 என்ற எண்ணில் தயக்கமின்றி தெரிவிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.


அதன்பிறகு உதவி மையத்துக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்தது. பாலியல் சார்ந்த புகார்கள் அதிகளவு வருகின்றன. இந்த மையத்துக்கு வரும் பாலியல் புகார்களை கையாள்வதற்கான வழிகாட்டுதல் இல்லாததால் குழப்பம் நிலவுகிறது.

இதுகுறித்து கல்வி வழிகாட்டி மைய ஆலோசகர்கள் சிலர் கூறியதாவது:-

அமைச்சரின் அறிவிப்புக்கு முன்பு தினமும் 150 முதல் 200 அழைப்புகள் வரை வரும். அவை பெரும்பாலும் உயர்கல்வி குறித்த சந்தேகங்கள், பொதுத்தேர்வு குறித்த அச்சம் என கல்வி சார்ந்தவைகளாக இருக்கும். சில அழைப்புகள் மட்டுமே கல்வி கட்டண முறைகேடு போன்றவையாக இருக்கும்.

ஆனால் சில நாட்களாக உதவி மையத்துக்கு தினமும் 500 முதல் 550 அழைப்புகள் வரை வருகின்றன. அவற்றில் பெரும்பாலும் பாலியல் புகார்கள் மற்றும் அது தொடர்புடையதாகவே உள்ளன.

வழக்கமாக மையத்தில் மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு ஆலோசனைகள் மட்டுமே வழங்கப்படும். உளவியல் பாதிப்புகள் மனநல நிபுணர் மூலம் சரி செய்யப்படும். பள்ளிகள் மீதான புகார்கள் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆனால் பாலியல் புகார்கள் குறித்த வழிகாட்டுதல் பள்ளி கல்வித்துறையால் வழங்கப்படவில்லை. இதனால் இவற்றை கையாள முடியாமல் அதிகாரிகள் திணறுகிறார்கள். இதன் காரணமாக நிறைய புகார்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

சில மாணவிகள் தெரிவிக்கும் பாலியல் சம்பவங்கள் மிக மோசமானவை. அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாத நிலையில் இருப்பது எங்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தற்போது பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதவி ரத்து செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டு ஐஏஎஸ் அதிகாரி அங்கே அமர்த்தப்பட்டு உள்ளதால் அவரை நேரடியாக அணுகுவதில் சிக்கல் இருப்பதாகவும், பாலியல் சீண்டல்கள் தொடர்பான புகார்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் கொடுத்தால் அவர்களுக்கு இதில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் விழிப்பதாகவும் கூறுகின்றனர்.. 

இது காவல்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் யாரிடம் தெரிவிப்பது என்றும் புரியாமல் திணறுகின்றனர். மேலும் இந்த உதவி மையத்தின் ஒருங்கிணைப்பாளராக தற்போது செயல்பட்டு வருபவர் புதிதாக திருமணம் ஆனவர் என்பதால் எப்போதும் போனும் கையுமாக இருப்பதனால் இங்கு வரும் புகார்களுக்கு தீர்வு காண முயல்வது இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த குறைதீர் மையம், புகார் பெறும் மையமாக மட்டுமே செயல்படும் அவலநிலை இருப்பதாகவும் தினசரி பெற்றோர்களும், மாணவிகளும் தெரிவிக்கும் பாலியல் சீண்டல்களுக்கு எந்த தீர்வும் கிடைக்காத நிலையில் தாங்கள் கையறு நிலையில் இருப்பதாகவும் ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

“புகாரை துணிந்து தாருங்கள் உங்களின் ரகசியம் காக்கப்படும்” என்று கூறி பெற்ற புகார்களையே ரகசியமாக வைத்துக் கொள்ளும் நிலை இருப்பதனால் இதற்கு பள்ளிகல்வித்துறை அமைச்சர் ஒரு தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த குறைதீர் மையத்தில் தற்போது தொலைபேசி வாயிலாக புகார்களை பெறுவதற்கு 9 பேர், உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க 6 பேர்,பாலியல் தொந்தரவுகள் தொடர்பான ஆலோசனைக்கு 2 பேர் என்ன மொத்தம் 17 பேர் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வழிகாட்ட வேண்டிய பள்ளியில்... 

வழிநடத்தும் ஆசிரியகளே... 

வழிதவறும்  செயல்கள்...  

கலியுகத்தின் கர்மா....

காலச்சக்கரம் சுழற்சியே அனைத்திற்கும் தீர்வு...

தீச்செயலிலிருந்து விலகி  நற்செயலுக்கு 

மாறுவோம்... மாற்றுவோம்....


No comments

Thank you for your comments