Breaking News

தொண்டர்கள் இல்லையேல் தலைவன் இல்லை... ஒப்புக்கொள்ளுங்கள்...

தன் தலையில் தானே மண்ணை

அள்ளிப் போட்டுக்கொண்டது போதும்...!

தகுதி இல்லாதவனை 

தலைவனாக ஏற்காதே...!

நாளை வரும் தலைவலிக்கு

 தீர்வு இல்லை மறவாதே...!


தலைமைப்பதவி தலைமேல் 

கணம் என்று எண்ணாதே...!

நம் குடும்பத்திற்கு நாம் 

தலைவனாகும் போது 

நமது குடியரசுக்கும் 

தலைவன் ஆக முடியாதா...!


கூட்டத்தை கூட்டிக்கொண்டு 

கோசம் போடுகிறான்...!

கைது செய்யும் நேரம் 

கைகாட்டி விடை பெறுகிறான்...!


தொண்டர்களை நம்பிதான் 

தலைவனின் ஆர்ப்பாட்டமும் போராட்டமும்...!

எந்த தலைவன் இதுவரை 

தீக்குளித்து இருக்கிறான்...!

தொண்டர்கள் இல்லையேல்

தலைவன்  இல்லை...!


கட்சித் தாவும் தலைவன் 

மதமாற்றத்தை  எதிர்த்து போராடுகிறான்...!

பெட்டி கை மாறும்போது 

கொள்கையும் மாறிப் போகிறது...!

அரசியலில் இதெல்லாம் சாதாரணம் 

அடிமை தொண்டனுக்கோ  சதா ரணம் ...!


ஆரம்ப காலத்தில் போராட்டத்திற்காக 

ஆள் குவிப்பு வழக்கு...!

ஆண்டு முடித்த பின் 

சொத்து குவிப்பு வழக்கு...!


இதுவரை எந்த தொண்டனும் 

சொத்து குவிப்பில் கைதாகவில்லை...!

அவன் கையில் பணமும் இல்லை

அவன் மனதில் வறுமையும் இல்லை...! 


கை தட்டி தட்டி -  அவன்

 கை வருவதையும் 

தட்டிவிட்டு இருக்கிறான் - அவன்

 கையாலாகாத தனம் அல்ல 

உன் மீது கொண்ட நம்பிக்கையே...!

 

எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் - ஏன்

அரசன் ஆக முடியாதா...!


கல்லுக்கே பாடம் எடுக்க முடியும் போது 

இந்த கயவர்களுக்கு பாடம் எடுக்க முடியாதா...!

இந்நாட்டு குடிமகன் தானென்றால் 

என் நாட்டை நானாள கூடாதா...


தொண்டர்கள் எல்லாம் 

மதில்மேல் பூனை...!

தலைவன் எவ்வழியோ 

தொண்டனும் அவ்வழி...!



வெட்டுக்குத்து என்று திரிந்தவன் 

துட்டு குடுத்து தலைவனாகிறான்

தலையை வெட்டியவன் - இங்கே தலைவன்

வீர பரம்பரை என்பது

 சாதி பரம்பரை ஆகிப்போனது...!


தலைவனோ  தனிவழி 

அவனுக்கு நல் வழி- ஒப்புக்கொள்ளுங்கள்

ஓட்டுரிமையை  விற்றால் - திருவோடு

நாளை நாம் தெருவோடு - ஒப்புக்கொள்ளுங்கள்

 ஓட்டுரிமை   நம் ஜனநாயகம்

தலைவனுக்கே  நாம்  தலைவன் - ஒப்புக்கொள்ளுங்கள்

தொண்டர்கள் இல்லையேல் 

தலைவன் இல்லை - ஒப்புக்கொள்ளுங்கள்


🔏 ஆற்காடு க குமரன்




No comments

Thank you for your comments