Breaking News

ஒகேனக்கல் காவரி ஆற்றில் நீர் வரத்து... அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு

 தருமபுரி, நவ.16-

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவரி ஆற்றில் நீர் வரத்து குறித்து மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு  செய்தார்.

மழைக் காலங்களில் அதிகமாக செல்லும் உபரி நீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள முக்கிய ஏரிகளுக்கு நிரப்ப துறை அதிகாரிகளைக் கொண்டு ஒரு விரிவான ஆய்வு செய்து, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல். 

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் நீரேற்று நிலையம் அருகில் காவரி ஆற்றின் நீர் வரத்து குறித்து மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் இன்று (16.11.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஜி.கே.மணி (பென்னாகரம்), திரு.ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), திரு.வே.சம்பத்குமார் (அரூர்), திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது:

காவிரி ஆற்றின் குறுக்கே ராசிமணல் உள்ளிட்ட அணைகள் கட்டுவது குறித்து நீண்ட நாட்களாகவே மாநிலங்களுக்கிடையே சில பிரச்சனைகள் இருந்து வருகின்றது. இந்த அணைகள் கட்டுவதில் உள்ள பிரச்சனைகள் சரிசெய்த பின்பு, ராசிமணலில் அணை கட்டுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும், அணை கட்டுவோம் என கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், நீதிமன்றத்திற்கு செல்லும் எல்லோரும் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக தான் வரும் என்று சொல்வார்கள். நாங்களும் சொல்கிறோம் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக தான் வரும். மேலும் காவிரி ஆற்றின் உபரி நீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்பினால், விவசாயம் செழிக்கும் வாழ்வாதாரம் உயரும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். நான் தற்பொழுது ஒகேனக்கல் பகுதியில் ஆய்வு செய்தேன். இதில் மழைக் காலங்களில் அதிகமாக செல்லும் உபரி நீரை பென்னாகரம் அருகே உள்ள கண்டேயன்குட்டை ஏரியில், நிரப்பி அனைத்து ஏரிகளுக்கும் நிரப்ப வேண்டும் என்று எனக்குள் எண்ணம் வந்திருக்கிறது. இதுகுறித்து துறை அதிகாரிகளைக் கொண்டு ஒரு விரிவான ஆய்வு செய்து பிறகு இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மரு.இரா.வைத்திநாதன்,இஆப., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தடங்கம்.பி.சுப்பிரமணி, திரு.பி.என்.பி.இன்பசேகரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் திரு.செங்குட்டுவன், செயற்பொறியாளர் திரு.சங்கரன், பொதுப்பணித்துறை நீர் வள ஆதார செயற்பொறியாளர் திரு.குமார், துணை இயக்குநர் (கனிம வளங்கள்) திருமதி.விஜயலட்சுமி, பென்னாகரம் வருவாய் வட்டாட்சியர் திரு.அசோக்குமார், பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.கவிதா ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.வடிவேலன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments