Breaking News

அமைச்சருக்கும் செயலருக்கும் ஏழாம் பொருத்தம்...!-

சென்னை, நவ.16-

வீட்டு வசதித் துறைச் செயலராக இருக்கும் ஹிதேஷ்குமார் மக்வானாவுக்கும், துறையின் அமைச்சராக இருக்கும் முத்துசாமிக்கும், 'ஏழாம் பொருத்தமாக' இருப்பதாக, துறை முழுதும் பரவலான பேச்சு அனல் பரக்கிறது.

மக்கள் நலனுக்காக எந்தத் திட்டத்தை நிறைவேற்றலாம் என சொன்னாலும், அதற்கெல்லாம் நிதி கிடையாது என்பது உள்ளிட்ட ஏதேதோ காரணங்களைச் சொல்லி, திட்டத்தை, துவக்கத்திலேயே கிடப்பில் போட வைத்து விடுகிறாராம் துறையின் செயலர். துறை ரீதியிலான ஆய்வின் போதும், இது தொடர்பாக, அமைச்சருக்கும், செயலருக்கும் நேரடியாக வாக்குவாதம் நடப்பதாக, அதிகாரிகள் பதற்றமாக தெரிவிக்கின்றனர். 

இதற்குத் தான், அயல் பணியில் இருந்த உங்களை மெனக்கெட்டு, தமிழகத்துக்குக் கொண்டு வந்தாரா முதல்வர்... என்றெல்லாம் கேட்டு விட்டாராம் அமைச்சர். எதற்கும் அசைந்து கொடுக்காத துறைச் செயலர் மக்வானா, தன் நிலையில் இருந்து கொஞ்சமும் கீழே இறங்கி வர மறுத்து விட்டாராம்.

இதையடுத்து, என்னுடைய அமைச்சர் பதவிகளில், எத்தனையோ செயலர்களை பார்த்திருக்கிறேன். உங்களைப் போன்ற ஒருவரை பார்த்ததே இல்லை என சொன்ன அமைச்சர், முதல்வரிடம் பேசிக் கொள்கிறேன்... என்று ஆவேச பட்டராம்... அவர் உங்களை மாற்றினால் மட்டுமே, இந்தத் துறையில் எதையும் செய்ய முடியும் என, சொல்லி விட்டு சென்றாராம். அதன்பின், துறை ரீதியிலான ஆய்வுகளையும் தவிர்க்கிறாராம் அமைச்சர்.

இதற்கிடையில், முதல்வரிடம் வெளிப்படையாக எல்லாவற்றையும் சொல்லி விட்டாராம். கூடவே, அவரை அங்கிருந்து மாற்றிவிட்டு, புதியவர் ஒருவரை நியமித்தால் மட்டுமே, துறையில் வேகமாக செயல்பட முடியும் எனவும் சொல்லி விட்டாராம். 

கொஞ்சம் பொறுமையா இருங்க; விரைவில் நல்லது நடக்கும் என சொல்லி, அமைச்சர் முத்துசாமியை அனுப்பி வைத்தாராம் முதலமைச்சர் மு.கஸ்டாலின்.... இதனால், துறை செயலருக்கு எந்த நேரமும் மாற்றல் உத்தரவு வரலாம் என அமைச்சர் தரப்பு எதிர்பார்த்து காத்திருக்கிறதாம்.

தமிழ்நாடு அரசின் முக்கியமான ஐஏஎஸ் அதிகாரிகள் 10 பேர் கடந்த நவம்பர் ஆறாம் தேதி மாற்றப்பட்டனர். அதில் அதிகாரிகளின் மாற்றத்திற்கு இதேபோன்று அமைச்சர்களின் கோரிக்கைகளும்காரணமாம்...

அதிலும் குறிப்பாக “கைத்தறித் துறை அமைச்சர் காந்தி அண்மையில் முதல்வரிடம், தனது துறைச் செயலாளராக இருக்கும் அபூர்வா, தான் சொன்னது எதையும் கேட்பதில்லை என்றும் அவரை மாற்றிவிட்டு ஒரு குறிப்பிட்ட அதிகாரியை நியமிக்குமாறும் முதல்வரிடம் வேண்டுகோள் வைத்துள்ளாராம்.... அப்போது அவரிடம் முதல்வர், ‘ஒரு அதிகாரியை மாத்துங்கனு சொல்லுங்க. அதை பரிசீலிக்கலாம். ஆனா இன்னாரை நியமிங்கன்னு சொல்லாதீங்க. அதை நான் பாத்துக்கறேன்’ என்று காந்தியிடம் கூறி அனுப்பியிருக்கிறார்.

முதலமைச்சர் இப்படி சொல்கிறாரே என்ற ஒரு மனநிலையில்தான் அமைச்சர்காந்தி இருந்தார். ஆனால் அதிகாரிகள் மாற்றப் பட்டியலில் காந்தி கேட்ட அதிகாரியைத்தான் கைத்தறித் துறை செயலாளராக முதலமைச்சர் நியமித்துள்ளார். இதனால் அமைச்சர் தரப்பினர் மகிழ்ச்சியடைந்தனர். 

ஏற்கனவே 2006-11 திமுக ஆட்சிகாலத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியராக தர்மேந்திர பிரதாப் யாதவ் பணிபுரிந்தார். அப்பொழுதே சட்டமன்ற உறுப்பினராக இருந்த காந்திக்கும் கலெக்டர் தர்மேந்திர பிரதாப் யாதவிற்கும் நல்ல நட்பு உண்டு. இந்த நட்பு அவர் வெவ்வேறு துறைகளுக்கு சென்றபோதும் தொடர்ந்தது. 

இந்த நிலையில்தான் தற்போது தனது கைத்தறி துறையின் செயலாளராக தர்மேந்திர பிரதாப் யாதவ் நியமிக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் காந்தி. அதை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார் முதல்வர்.

 இதற்கு உட்கட்சி ரீதியான சில காரணங்களும் உண்டு. திமுக பொதுச் செயலாளரும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான துரைமுருகனின் தடைகளை தாண்டி நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அமைச்சராகியிருக்கும் காந்திக்கு அவர் விரும்பியபடி சில சாதகங்களை செய்து கொடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்கிறார்கள் ராணிப்பேட்டை திமுகவினர். 

அமைச்சர்கள்-செயலர்கள் பஞ்சாயத்து தொடர்கதையாக உள்ளது... மக்கள் பிரச்சனைகளோடு இவர்களது பஞ்சாயத்தையும் சேர்த்து பார்க்கவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... இந்நிலையையும் கடந்து கட்சியையும், ஆட்சியையும் வெற்றிகரமாக  வழிநடத்தி மக்கள் பணியாற்றி வருகிறார் என்பது நிதசர்னம்... 

No comments

Thank you for your comments