குமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்..!
கன்னியாகுமரி, நவ.15-
வட உள் தமிழ்நாடு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் அம்மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இன்று கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு, சேலம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், வரும் 18ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்த வானிலை மையம், நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி முதல் நேற்று வரை 24.9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், அம்மாவட்டத்தின் இயல்பான மழைப்பொழிவு அளவை விட இது 10 மடங்கு அதிகம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், வரும் 18ஆம் தேதி வரை வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 17ஆம் தேதி வரை அரபிக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments