கால்வாய் ஆக்கிரமிப்பு நீரின்றி காணப்படும் நர்சனேரி.... நீர் நிரப்ப விவசாயிகள் கோரிக்கை...
தருமபுரி, நவ.22-
தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட லிங்காபுரம் ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீர் 16 வது வார்டு பகுதியில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள நர்சனேரிக்கு கால்வாய் மூலம் நீர் சென்று நிரம்பும். தற்பொழுது லிங்காபுரம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறும் கால்வாய் பகுதியை சிலர் மண் கொட்டி தடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், தற்பொழுது பெய்துவரும் தொடர் கனமழையில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உபரி நீர் விவசாய நிலங்களில் பாய்ந்து ஓடுகிறது. எங்கள் பகுதி நர்சனேரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய் 30 வருடங்களாக சிலர் ஆக்கிரமித்து உள்ளதால் நீர்வரத்து இல்லாமலே உள்ளது.
இந்த ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீரை பயன்படுத்தி 100 ஏக்கருக்கு மேற்பட்ட சிறு மேட்டுநில விவசாயிகள் நெல், மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யலாம் என்ற எதிர்பார்ப்பில் நாங்கள் உள்ளோம்.
1500க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிநீர் பிரச்சனை தீரும் எனவே அடைக்கப்பட்டுள்ள நீர்வரத்து கால்வாய் அகற்றி தூர்வாரி ஏரியில் தண்ணீரை சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.



No comments
Thank you for your comments