Breaking News

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கோயம்புத்தூர்: 

கோயம்புத்தூர் மாவட்டம் பூலுவப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி  அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

பின்னர் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்ததாவது,  

இலங்கை தமிழர்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய  பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசால் வழங்கி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் மொத்தம் 106 இலங்கை தமிழர் நல்வாழ்வு முகாம்களில் 58000 இலங்கை தமிழர்கள் வசித்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தில்  பூலுவப்பட்டி, வேடர் காலனி, கோட்டூர், ஆழியார் ஆகிய பகுதிகளில் 4 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன.இதில் 2977 இலங்கை தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இம்முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு மருத்துவ பாதுகாப்பு அளிக்கும் வகையில்  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பணக்கொடை செப்டம்பர் மாதம் முதல் உயர்த்தப்பட்டுள்ளது. குடும்பங்களுக்கு நிதியாக ரூ.2000 மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. 

மேலும் முகாமில் வசிக்காமல் காவல்துறையில் பதிவு செய்து வெளிப் பகுதியில் வசிக்கும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும் கொரோனா நிதியாக ரூ.4000 வழங்கப்பட்டுள்ளது. கொரோன தொற்றால் ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம், இரண்டு பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. 

அனைவருக்கும் கொரோனா நோய் தொற்று தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.  கோட்டூர் முகாமில் புதிதாக 217 வீடுகளும் ஆழியார் முகாமில் புதியதாக 212 வீடுகள் கட்டப்பட உள்ளன மேலும் அனைத்து முகாம்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வி பயிலும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை 4 மடங்கு உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

 இந்நிகழ்வில் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.13.05 இலட்சம் மதிப்பில் வீட்டு உபயோக பாத்திரங்கள், ரூ 35.28 இலட்சம் மதிப்பில் புத்தாடைகள், ரூ 4 இலட்சம் மதிப்பில் 8 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி, ரூ.9.81 இலட்சம் மதிப்பில் எரிவாயு இணைப்பு, ரூ.20.32 இலட்சம் மதிப்பில் எரிவாயு மானியம் என மொத்தம் ரூ.82.47 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.  

இதுபோன்ற அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அமைச்சர் வி. செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி எஸ் சமீரன், வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments