பெற்றோர்களுக்கு தேவையான தேதிகளில் குழந்தைகள் பிறப்புக்கு தடை போட திட்டம்
சென்னை, நவ.16-
சென்னை எழும்பூர் தாய்-சேய் மருத்துவமனையில் கடந்த 11 ம் தேதி ஒரே நாளில் 68 குழந்தைகள் பிறந்தன, இந்த குழந்தைகளுக்கு பரிசு பொருட்களும் அவர்களின் பெற்றோர்களுக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள், செவிலியர்களைப் பாராட்டியும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் இன்று (16-11-2021) கேடயங்களை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, எழும்பூர் அரசு தாய்-சேய் மருத்துவமனையில் கடந்த 11 ம் தேதி 24 மணி நேரத்தில் 68 குழந்தைகள் பாதுகாப்பாக பிறந்துள்ளன.
இதில் 60 சதவீதம் குழந்தைகள் ஆபரேஷன் இல்லாமல் சுகப் பிரசவத்தோடு பிரந்துள்ளன, இதற்கான பணியில் 8 டாக்டர்களும் 22 செவிலியர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த அரிய பணியை செய்த டாக்டர்களுக்கும் செவிலியர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் .
அரசு மருத்துவமனைகளில் 65 சதவீதம் பிரசவங்கள் சுகபிரசவங்களாக நடைபெறுகின்றன தனியார் மருத்துவமனைகளில் 37 சதவீதத்தினருக்கு மட்டுமே சுகப்பிரசவம் நடக்கிறது.
முன்பெல்லாம் நூறு சதவீதம் சுகப்பிரசவமாக இருந்தது இப்போது சிசேரியன் அதிகரித்துக்கொண்டே வருகிறது இதற்கு காரணம் பெற்றோர்கள் தங்களுக்கு தேவையான தேதிகளில் குழந்தைகள் வெளியில் எடுக்க வேண்டும் என்று நினைப்பது தான் இந்த செயலை ஊக்கப்படுத்தக்கூடாது என்று டாக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். சிசேரியனை தவிர்க்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கும் கடிதம் எழுத இருக்கிறோம். இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறினார்.
இன்றைய நிகழ்வில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. இராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர் தாரேஷ் அகமது, மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.நாராயணபாபு, இராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை முதல்வர் மரு தேரணிராஜன், அரசு தாய்&சேய் நல மருத்துவமனை இயக்குநர் மரு.விஜயா மற்றும் அரசு உயரலுவலர்கள் கலந்துகொண்டனர்.

No comments
Thank you for your comments