Breaking News

பத்திரிகையாளர் குடும்ப நிதி உயர்வு அரசாணை வெளியீடு!

சென்னை:

பத்திரிகையாளர் குடும்ப நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், அதற்கான அரசாணையை இன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

பத்திரிகைத் துறையில் பணியாற்றும் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர் மற்றும் பிழைதிருத்துவோர் பணிக்காலத்தில் இயற்கை எய்திட நேரிட்டால், அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என செய்தித் துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் கடந்த சட்டப்பேரவையில் அறிவித்தார். 

மேலும், பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும். இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி வழங்கப்படும், சமூகம் மற்றும் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காக பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளருக்கு ரூ.5 லட்சம் பரிசுதொகை கொண்ட கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகள் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (15-11-2021) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,”பத்திரிகைத் துறையில் பணியாற்றுவோர்கள், பணியில் இருக்கும்போது உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து உயிரிழக்க நேரிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.5,00,000 வழங்கப்படும்.

15 ஆண்டுகள் பணிபுரிந்து உயிரிழந்தால் ரூ3.75000, 

10 ஆண்டுகள் பணிபுரிந்து உயிரிழந்தால் ரூ.2.50.000, 

5 ஆண்டுகள் பணிபுரிந்து உயிரிழந்தால் ரூ.1,25,000 

என்று நடைமுறையிலுள்ள விதிகளின்படி, குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தில் உதவி பெற உரிய சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை பெற்று இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments

Thank you for your comments