விவசாயக் கடன் தள்ளுபடி: முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உண்டு - உச்ச நீதிமன்றம் உறுதியான தீர்ப்பு
புதுடெல்லி
5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்களுக்கும் கடன்களை தள்ளுபடி செய்ய உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முந்தைய அதிமுக அரசு மேல்முறையீடு செய்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
தமிழ்நாடு அரசுக்கு எந்தெந்த விவசாயிக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது தொடர்பாக முடிவெடுக்க அனைத்து அதிகாரமும் உண்டு என்றும் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விவசாயிகள் அமைப்பு ஒன்று தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 5 ஏக்கருக்கு மேல் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.
சிறு, குறு விவசாயிகள் என வரையறுத்து கடன் தள்ளுபடி செய்தது சரிதான். யார் யாருக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வரையறுக்க அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்று தெரிவித்த நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கினால், அரசின் பொருளாதாரம் பாதிக்கும், நிதிச்சுமை ஏற்படும் என முந்தைய அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
தற்போதைய திமுக அரசு, அரசின் புதிய கொள்கை முடிவுப்படி நிதி நிலைமைக்கு ஏற்ப தகுதியான அனைவருக்கும் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்வதாக முடிவு எடுக்கப்பட்டு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்துசெய்து உத்தரவிட்டது. நிலுவையில் உள்ள வழக்கையும் முடித்துவைத்து.
தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் கடன் தள்ளுபடி செய்வதில் எந்த தவறும் இல்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
No comments
Thank you for your comments