மீண்டும்... தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
Click Here => Join the Telegram
Follow @ Google News
சென்னை:
25, 26, 27ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது. வங்கக்கடலில் உருவாகிய 2 காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடந்த 5ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் வெள்ள சேதங்கள் ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த 15ம் தேதி உருவான மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம், பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழையை கொடுத்தது.
கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் மூலம் இதுவரையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பதிவாகி உள்ளது. நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஏரி, குளங்கள், கால்வாய்கள் அனைத்தும் நிரம்பியதால் பல மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இலங்கையை கடந்து தென் தமிழகத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நாளை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தென் தமிழகம் நோக்கி கடந்து வரும் என்று கணிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழ்நாடு கடற்கரை பகுதிகளில் கடல் மட்டம் 3.1 கி.மீட்டர் உயரத்துக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் இது இலங்கையை கடந்து தெற்கு தமிழகத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அடுத்த 5 நாட்களுக்கு கன மழையை எதிர்பார்க்கலாம்.
நாளை (24ம் தேதி) முதல் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்புள்ளது. 25, 26, 27ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments