அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம்
சென்னை:
கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம் செய்யப்படுவதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலாளராக இருந்த அன்வர் ராஜா. இவர் தீவிர ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா பக்கம் இருந்த இவர், அவர் சிறைக்குச் சென்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராகச் செயல்பட்டார்.
இந்நிலையில், சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து, அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த புதன் அன்று நடைபெற்றது.
கூட்டத்தின்போது, சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் விமர்சித்து பேசியதாக அன்வர் ராஜா மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அன்வர் ராஜாவை தாக்க முற்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே புதன்கிழமை (டிச.1 )அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து கழக தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அன்வர் ராஜா Ex, M.P (கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்) இன்று முதகழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளனர்.
தலைமைக் கழக அறிவிப்பு!
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) November 30, 2021
திரு.அ.அன்வர்ராஜா,EX. M.P., கழகத்தின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளிலிருந்து நீக்கம்.#AIADMK pic.twitter.com/Gcftom2EYY
No comments
Thank you for your comments