Breaking News

குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 : மேஷ ராசி பொதுப்பலன்கள்


நவகிரகங்களில் பூரண சுப பலம் பெற்றவர் குருபகவான். தேவர்களுக்கு குருவான இவரை பிரகஸ்பதி என்றும், வியாழ பகவான் என்றும் அழைப்பர். நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனத்திற்கும், புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன் ஆவார்.

குருவருள் இருந்தால் திருவருள் கூடிவரும் என்பது ஆன்மிக நியதி ;   குரு பார்வை இருந்தால் சகல நன்மைகளும் ஏற்படும் என்பது ஜோதிட விதி.

குரு பெயர்ச்சி ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.  ஜாதகத்தில் குருபகவான் சுப பலம் பெற்று, நல்ல இடத்தில் இருக்கப்பெற்ற ஜாதகர் மற்றவர்கள் போற்றும்படியாக வாழ்வர். குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை, பழக்க வழக்க குணங்கள்  மிகச் சிறப்பாக இருக்கும். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல, குரு நிற்கும் இடம் பாழ், பார்க்கும் இடம் கோடி புண்ணியம் தரும்.

குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து சிறப்பு பார்வையாக  5, 7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்வார். 

💐 குரு பார்வை செய்யும் இடங்கள்
மிதுன ராசி - குருவின் 5ம் பார்வை
சிம்ம ராசி - குருவின் 7ம் பார்வை
துலாம் ராசி- குருவின் 9ம் பார்வை

குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விட பார்க்கும் பலமே அதிகம். எனவே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும். ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் நீச்சமாகவும், வக்கிரமாக இருந்தாலும், எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் சரி, குரு பார்த்து விட்டால் போதும். தானாக பலம் கிடைத்து விடும், தோஷம் விலகி விடும். நீசம் பெற்ற கிரகங்களும் குருபார்வை செய்தால் நீச பங்கம் யோகமாகிவிடும். 

கோட்சார ரீதியாக ஒரு ராசியில் 1 வருடம் தங்கும் குரு பகவான் ஜென்ம ராசிக்கு, 2-5-7-11 ஆகிய பாவங்களில் சஞ்சரிக்கும் போது நற்பலன்களையே வழங்குவார்.

குரு பெயர்ச்சி காலம் - நேரம் :

திருக்கணித பஞ்சாங்க முறைப்படி

நிகழும் மங்களகரமான பிலவ வருஷம் கார்த்திகை மாதம் 4 ஆம் தேதி (20.11.2021) சனிக்கிழமை சூர்ய உதயாதி 43.13 நாழிகைக்கு இரவு 11:31 மணி அளவில் குரு பகவான் நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்

பின்பு  குரு அதிர்சார காலம் :

பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 24.31 நாழிகைக்கு பகல் 03:49 அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

வாக்கிய பஞ்சாங்க முறைப்படி

நிகழும் மங்கலகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் - தக்ஷிணாயனம் - சரத் ரிது - ஐப்பசி மாதம் 27ம் தேதி (13.11.2021) அன்றைய தினம் சுக்லப்க்ஷ தசமி - சதய நக்ஷத்திரம் - வ்யாகாத நாமயோகம் - பாலவ கரணம் - சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 30:24க்கு (மாலை மணி 6.22க்கு) ரிஷப லக்னத்தில் குரு பகவான்  மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆகிறார்.

 பின்பு குரு அதிர்சார காலம் :

பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 55.22 நாழிகை அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

இந்த முறை குருபகவான் அதிசாரமாக பெயர்ச்சியாகிய மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு வராமல் அடுத்து நேராக மேஷ ராசிக்கு 21.04.2023 ஆம் தேதி மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

குரு அதிசாரம் என்றால் என்ன?

சூரிய மண்டலத்தில் சூரியன், சந்திரனைத் தவிர மற்ற கிரகங்கள் அவ்வப்போது அதிசார, வக்ர நிலை காரணமாக முன்னும், பின்னும் செல்லும். ஜோதிட விதிப்படி குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஒரு ஆண்டு காலம் சஞ்சரிப்பார். இதில் சில காலம் மட்டும் அதிசார நிலைக்கு சென்று வருவார்.

அந்த வகையில் குரு  சாதாரணமாகச் செல்லும் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் நகரத் தொடங்குவதால் தான் இருக்கும் ராசியிலிருந்து அடுத்த ராசிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதே சமயம் சில காலத்தில் அதன் வேகம் குறைந்து மீண்டும் பழைய நிலைமையை அடைய வேகம் குறையத் தொடங்கும்.

சாதாரண நேரங்களைப் போல் இல்லாமல், தன் பயணத்தில் வேகம் எடுக்கும் குரு ஞானம், புத்திசாலித்தனம் மற்றும் மகிழ்ச்சியைச் சற்று அதிகமாக வழங்குபவர். அசாதாரண பணிகளைச் செய்யும்போது புகழ் மற்றும் மரியாதையை அடைகிறார்கள்.

குரு பெயர்ச்சிக்கும், குரு அதிசார பெயர்ச்சிக்கும் நிறைய மாற்றங்களுடன் கூடிய பலன்கள் ஒவ்வொரு ராசிக்கும் கிடைக்கும். சில ராசிகளுக்கு யோக பலன்கள் குரு பெயர்ச்சியின் போது கிடைக்கும்.  அதுவே அதிசார பெயர்ச்சியின் போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறலாம். சிலருக்கு மோசமான பலன்கள் யோக பலன்களாக மாறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

மேஷ ராசி குரு பெயர்ச்சி பொது பலன்கள்
அசுவனி, பரணி, கிருத்திகை 1ம் பாதம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசி அன்பர்களே..! 

மேஷ ராசியில் பிறந்தவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் மிக்கவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசுவார்கள். பொறுமை என்பதே  கிடையாது, நினைத்ததை உடனே சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு கொண்டவர்கள்..

இதுநாள் வரை 10ம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருந்த குரு  உங்கள் முயற்சிகளுக்கெல்லாம் முட்டுக்கட்டைகளைப் போட்டுக்கொண்டிருந்தார். சின்னச் சின்ன வேலைகளைக் கூட நினைத்தபடி முடிக்க முடியவில்லையே என்று தவித்தீர்களே அந்த நிலை இனி மாறும்.  

தற்போது உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தான அதிபதி (9ம் வீட்டு அதிபதி) லாப ஸ்தானமான 11ல் அமர்வதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகும்.  நினைத்த காரியங்களை தடையில்லாமல் சாதித்து வருவீர்கள்.  இனி உங்கள் திறமைகள் பளிச்சிடும்.  

குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவில் இருந்த தடைகள் அகலும்.  கடன் பிரச்னைகளுக்கெல்லாம் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.  முக்கியப் பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். திருமணத்தில் ஏற்பட்டிருந்த தடைகள் தாமதங்கள் நீங்கும். மனக்குறை நீங்கும்.... உற்சாகத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

 குருபகவான் பார்வை பலன்கள்: 

குருபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்வையிடுவார்.  குருபகவான் தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடத்துக்கே அதிகம் நன்மை புரிவார்.

5ம் பார்வையாக 3வது வீடான மிதுனம்:

குருபகவானின் 5ம் பார்வையாக உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான மிதுனத்துக்குக் கிடைக்கிறது.  அதாவது இளைய சகோதரர், தைரிய ஸ்தானத்தைப் பார்க்கிறார்.  இதனால் இளைய சகோதரர்கள் வகையில் இருந்துவந்த பிரச்னைகள் வருத்தங்கள் நீங்கும்.

எடுக்கும் முயற்சியில் அனுகூலம், எதிலும் தனித்து செயல்படும் நிலை ஏற்றம் உயர்வு உண்டாகும். இதன் மூலம் எந்த ஒரு செயலிலும் தைரியங்கள் அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். அதே போல் அவர்களுக்கு உதவிகளை செய்வீர்கள். அவர்களுடனான உறவு வலுபடும். குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உங்கள் பெயர் புகழ் அதிகரிக்கும்.

7ம் பார்வையாக 5வது வீடான சிம்மம் 

குருபகவானின் 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5ம் வீடான சிம்மத்தை பார்வை செய்கிறார். அதாவது, உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தனம், புத்திர ஸ்தானத்தனம், பாக்கிய ஸ்தானத்தனம் மீது விழுவது மிகவும் விசேஷமானது. 

குரு தனகாரகன் என அழைக்கப்படுகிறார். பாக்கிய ஸ்தானத்தனம் மீது  பார்வை விழுவதால் புதிய வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படலாம்.  பெரிய வசதி இல்லாதவர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடக்கூடிய காலமாக அமையும். உங்களின் செயல்பாட்டுக்கு சிறப்பான வெற்றியும், முதலீடுகளுக்கும் நல்ல தன பலன்கள் பல மடங்கு கிடைக்கும். பூர்வீக வழியில் கிடைக்க வேண்டிய லாபங்களை தடையின்றி அடையும் வாய்ப்பு உண்டாகும்.  

மேஷ ராசிக்கு பிள்ளைகள் வகையில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெற்றோர், பிள்ளை இடையே பிணைப்பு அதிகரிக்கும். மாணவர்களின் கல்வி ஆர்வம் மேம்படும். உயர் கல்வியில் சிறந்த வாய்ப்புகள் அமையும். இல்லறம் இனிப்பாகும். குழந்தை வரம் வேண்டுவோருக்குக் கிடைக்கக்கூடிய அற்புத காலமாக இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். 

9ம் பார்வையாக 7வது வீடான துலாம்

குருவின் 9ம் பார்வையாக ராசிக்கு 7ம் இடம் அதாவது மனைவி, தொழில், கூட்டாளி ஸ்தானத்தின் மீது விழுகிறது. இதனால் திருமண முயற்சியில் இருந்த தடைகள் நீங்கும்

திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நினைத்தது போல சிறப்பாக நடைபெறும். காதல் கை கூடக்கூடிய அற்புதமும் நடக்கும். அதே சமயம் பிள்ளைகளுக்குத் திருமண யோகம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் உங்களுக்கு உதவியும், அனுகூலமும் உண்டாகும்.

குரு பகவானின் சஞ்சார பலன்கள்:

13.11.2021 முதல் 30.12.2021 வரை :

இந்தக் காலகட்டத்தில் குருபகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவு வாய்க்கும். துணிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அதனால் நன்மைகள் உண்டாகும். இதுவரை தயங்கித் தயங்கிப் பேசிக்கொண்டிருந்தவர்களின் பேச்சில் ஒரு தீர்க்கமும் உறுதியும் தென்படும். புதிய வீடு மனை வாங்கும் விஷயங்கள் சாதகமாகும். பழைய சொத்தை நல்ல விலைக்கு விற்று லாபம் பார்ப்பீர்கள். உறவுகளுக்கிடையே நல்ல புரிதல் உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். வழக்கு வியாஜியங்களில் உங்கள் பக்கமே தீர்ப்பாகும். கவலைப்பட வைத்த தாயாரின் உடல் நிலை இப்போது சீராகிவிடும். உறவினர்களின் அன்புத் தொல்லையும் குறையும்.

31.12.2021 முதல் 2.3.2022 வரை : 

இந்தக் காலகட்டத்தில் ராகு பகவானின் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இந்தக் காலத்தில் நீங்கள் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போகவேண்டும். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், போட்டி மனப்பான்மை ஆகியவற்றைத் தவிர்ப்பது அவசியம். விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடரலாம். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

2.3.2022 முதல் 13.4.2022 வரை :

இந்தக் காலகட்டத்தில் குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்திலேயே சஞ்சாரம் செய்வதால் இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளுக்குத் திருமண முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மேஷ ராசி அன்பர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று இறைவழிபாடுகளையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றுவீர்கள்.

அசுவினி நட்சத்திர பலன்கள்:  

கேதுவை நட்சத்திர அதிபதி ஆகவும் செவ்வாயை ராசி அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு கும்ப குருவின் இந்த ஐந்து மாத காலமும் பொற்காலமாகவே அமையும். அதிலும் குறிப்பாக 31.12.2021 வரை உங்களது ராசிநாதன் ஆகிய செவ்வாயின் சாரம் பெற்று குரு சஞ்சரிக்க உள்ளதால் நினைத்த காரியங்களை தடையில்லாமல் சாதித்து வருவீர்கள்.  நிலுவையில் உள்ள பிதுர்கர்மாக்கள், குலதெய்வ வழிபாடு ஆகியவற்றை தடையின்றி செய்து முடிப்பீர்கள். இதன் மூலம் மனக்குறை நீங்கும். உற்சாகத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

நிதி :  தனலாப ஸ்தானத்தில் குருவின் அமர்வு நிதி நிலையை சீராக்கும். நீண்ட நாள் கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிதாக கடன் வாங்க யோசிப்பீர்கள். கடன் வாங்காமல் சமாளிக்கும் கலையை கற்றுக் கொள்வீர்கள். மார்ச்  21ம் வரை புதிய சேமிப்பில் இறங்குவதற்கு வாய்ப்பு உருவாகும். ஆன்மிகம் சார்ந்த செலவுகள் கூடும். தான தருமங்களில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு வருவாய் சிறப்பாக அமையும். புதிதாக வீடு, மனை வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

குடும்பம் :  குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குறைந்து நிம்மதியான சூழல் நிலவும். குடும்பத்தினருக்கிடையே உங்கள் வார்த்தைகள் முக்கியத்துவம் பெறும். அனைவரின் நலனுக்காக அதிகமாக அலைவீர்கள். உடன்பிறந்தோருக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்வீர்கள். அண்ணன், அக்கா வழியில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். பெற்றோரின் ஆதரவுடன் செயல்பட்டு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கவனம் தேவை.

கல்வி : குருவின் அருளால் கல்வித்தரம் உயர்வு பெறும். குறிப்பாக ஆராய்ச்சி படிப்பில் உள்ள மாணவர்கள் தடைகள் நீங்கி வெற்றி காண்பர். அந்நிய தேசம் சென்று உயர்கல்வி பயில விரும்புவோர்க்கு நேரம் சாதகமாக உள்ளது. வணிகவியல் துறை சார்ந்த மாணவர்கள் ஏற்றம் காண்பர். சிஏ படிப்பில் கண்டு வரும் தடைகள் நீங்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி காண்பீர்கள்.

பெண்கள் :  கணவரின் உடல்நிலையில்  கவனம் தேவை. பேசும்போது தேர்ந்தெடுத்த வார்த்தைகளை பிரயோகிப்பீர்கள். குடும்பப் பிரச்னைகளில் உங்கள் வாதம் எடுபடும். பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் இடையே இருந்த விரிசலை சரி செய்வீர்கள். மகப்பேறுக்காக காத்திருப்போருக்கு சாதகமான நேரம். குடும்பப் பெரியவர்களின் ஆதரவுடன் சாதிப்பீர்கள்.

உடல்நலம் :  ரோக ஸ்தானத்தில் இருந்து குருவின் பார்வை விலகுவதால் உடல்நிலையில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். தொற்று நோய்கள், சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புண்டு. ஒரு சிலருக்கு கணையம், கல்லீரல் பகுதிகளில் சிரமம் தோன்றுவதற்கான வாய்ப்புண்டு. அவ்வப்போது தண்ணீர் பருகுவதும் சிறுநீர் கழிப்பதும் உடல்நலனை மேம்படுத்தும்.

தொழில் :  பத்தில் சனியின் ஆட்சி பலமும் பதினொன்றில் குருவின் அமர்வும் இரண்டில் ராகுவும் உள்ளதால் தொழில்முறையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பணியாளர்கள் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவார்கள். உறுதியான செயல்பாடும் உண்மையான உழைப்பும் நல்ல லாபத்தினைப் பெற்றுத் தரும். வண்டி, வாகனங்கள் சம்பந்தப்பட்ட பணியாளர்கள், தொழிற்சாலை பணியாளர்கள், ராணுவம், காவல்துறையினர், நீதித்துறையினர் தங்கள் உத்யோகத்தில் விருது பெறுவார்கள். சுயதொழில் செய்வோரில் இரும்பு சம்பந்தப்பட்ட துறையினர், சமையல் கலைஞர்கள், உணவுத்துறை, சித்த மருத்துவம் ஆகியவற்றில் இருப்போர் அமோக லாபம் காண்பர். 

👍 பரிகாரம் 💐
திங்களன்று விநாயகர் வழிபாடு செய்யுங்கள்.
அதிர்ஷ்ட ஹோரைகள் செவ்வாய், சூரியன்
அதிர்ஷ்ட கிழமைகள் திங்கள், செவ்வாய், வெள்ளி;
திசைகள் கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள் சிவப்பு, மஞ்சள்
எண்கள் 3, 7, 9

பரணி நட்சத்திர பலன்கள்:  

வெற்றியைத் தரும் ஜெய ஸ்தானத்தில் குருவின் வரவு உங்களுக்கு மனமகிழ்ச்சியைத் தரும். நினைத்த காரியங்கள் எளிதாக நடைபெறுவதாக உணர்வீர்கள். செவ்வாயை ராசிநாதன் ஆகவும் சுக்ரனை நட்சத்திர அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் நீங்கள் வேகமாகச் செயல்பட்டாலும் நிதானம் தவறாமல் காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்களால் அளப்பறிய நன்மை காண்பீர்கள். வலைதளம், சோஷியல் மீடியா ஆகியவற்றை உங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். வெளிநாடு வாழ் நண்பர்கள் மூலம் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதே நேரத்தில் நல்லவர்கள் யார் தீயவர்கள் யார் என்பதை பிரித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். கும்ப குருவின் இந்த ஐந்து மாத காலமும் உங்கள் வளர்ச்சியை உறுதி செய்கிறது.

நிதி : டிச. 31 முதல் நிதி நிலையில் ஏற்றத்தைக் காண்பீர்கள். சேமிப்பு உயர்வடையும். அதே நேரத்தில் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். சிறு வியாபாரத்தில் பேரம் பேசும் நீங்கள் பெரிய வியாபாரத்தில் கோட்டை விடுவீர்கள். கேஷ் பேக் விளம்பரங்களால் கவரப்பட்டு தேவையற்ற பொருட்களை வாங்குவதால் வீண்விரயம் உண்டாகலாம். கவனம் தேவை. மார்ச் மாத இறுதியில் எதிர்கால நலன் கருதி புதிய சேமிப்பில் இறங்கும் வாய்ப்புண்டு. தங்கம், வெள்ளியினால் ஆன பொருட்கள் சேரும்.

குடும்பம் : குடும்பத்தில் சலசலப்போடு கலகலப்பும் கலந்திருக்கும். தம்பதியருக்குள் இணக்கம் கூடும். பெரியவர்களின் ஆலோசனை பயன் தரும். உடன்பிறந்தோரின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவீர்கள். சகோதரியின் குடும்பத்தாருக்கு பலன் கருதாமல் உதவி செய்ய முற்படுவீர்கள். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பீர்கள்.

கல்வி :  குருவின் திருவருளால் மாணவர்கள் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டு வருவார்கள். ஆன்லைன் வகுப்புகளால் அவதிப்பட்டு வரும் இந்த நேரத்தில் ஆசிரியரின் தனிப்பட்ட ஆதரவோடு நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். இயற்பியல், கணிதம், அக்கவுண்டன்சி, வரலாறு, மொழி இலக்கியம் ஆகிய துறை சார்ந்த மாணவர்கள் சாதிப்பார்கள். மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் கடுமையான உழைப்பினை வெளிப்படுத்த வேண்டும்.

பெண்கள் : பொறுப்புடன் செயல்பட்டு வரும் நீங்கள் பேச்சினில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். அண்டை வீட்டுப் பெண்களிடம் அதிக கவனம் தேவை. பிள்ளைகளின் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். குடும்பப் பெரியவர்களின் ஆதரவு இருப்பதால் தங்கு தடையின்றி உங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பிறந்த வீட்டாருடன் இருந்து வந்த மனக்கசப்பு காணாமல் போகும். மார்ச் மாதம் நான்காம் வாரம் முதல் மனதில் தேவையற்ற குழப்பங்கள் முளைக்கக் காண்பீர்கள்.

உடல்நலம் : உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு பிரச்னை உள்ளவர்கள் அதிக சிரமத்திற்கு ஆளாவார்கள். ஒரு சிலருக்கு கண்பார்வை கோளாறு, கடுமையான தலைவலி ஆகியவை உண்டாகும். கொரோனாவால் தடைபட்டு வந்த மருத்துவ சிகிச்சைகளை மீண்டும் மேற்கொள்ள ஏதுவான காலமாக அமையும். அறுவை சிகிச்சைகள் இந்த நேரத்தில் வெற்றி தரும் என்பதால் பயமின்றி இறங்கலாம்.

தொழில் : அரசாங்க பணியாளர்கள் நேர்மையான முறையில் பதவி உயர்வு பெறுவார்கள். சுயதொழில் செய்வோர் உழைப்பிற்கேற்ற ஊதியம் காண்பர். வியாபாரிகள், தொழிலதிபர்கள் பணியாட்களின் நலனில் அக்கறை கொள்வர். ரியல் எஸ்டேட், தரகு, கமிஷன் ஏஜன்சி, தங்க நகை வியாபாரம், தரை வழி போக்குவரத்து, எலக்ட்ரானிக்ஸ் துறை, மருத்துவ செவிலியர் துறை பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். மார்ச் மாத இறுதியில் பங்குதாரர்கள் வழியில் பிரச்னை உருவாகலாம் என்பதால் கூட்டுத்தொழிலில் சிறப்பு கவனம் தேவை.

👍 பரிகாரம் 💐
செவ்வாய்தோறும் மாரியம்மனுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபடுங்கள்.  வெள்ளிக்கிழமைதோறூம் பெருமாள் கோவிலிலுள்ள சக்கரத்தாழ்வாரை பதினொருமுறை வலம் வரவும்.
அதிர்ஷ்ட ஹோரைகள் சுக்ரன், செவ்வாய்
அதிர்ஷ்ட கிழமைகள் திங்கள், புதன், வெள்ளி
திசைகள் தெற்கு, தென்மேற்கு
நிறங்கள் சிவப்பு, வெள்ளை
எண்கள் 5, 6

கார்த்திகை 1ம் பாதம்  நட்சத்திர பலன்கள்:  

எதிலும் அவசரபட்டு செயல்படும் நீங்கள் இந்த குருப்பெயர்ச்சியின் காலத்தில் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்ற முடிவிற்கு வருவீர்கள். ஆயினும் எல்லோருக்கும் முன்பாக நாம் செய்து முடித்துவிட வேண்டும் என்ற அவசர குணம் மனதில் ஆழப் பதிந்திருக்கும். அநாவசியமான ஆசைகள் மனதை விட்டு அகலும். எது நமக்கு தேவை, தேவையில்லை என்பதை பிரித்து அறிந்து கொள்வீர்கள். பேச்சினில் கடமையுணர்வு அதிகமாக வெளிப்படும். கடந்த காலத்தில் கண்ட அனுபவம் உங்களை பக்குவப்படுத்தும். தைரியமும் மன உறுதியும் கூடும். இறங்கிய பணிகளில் நியாயமான முறையில் உங்களது வெற்றியைப் பதிவு செய்வீர்கள். உங்களது முயற்சிகளும், செயல்களும் மற்றவர்களுக்கு உதவும் வகையில் அமைந்து உங்கள் மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தும். செவ்வாயை ராசி அதிபதி ஆகவும் சூரியனை நட்சத்திர அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு நினைத்தது நடக்கும் நேரமிது.

நிதி : குருவின் லாப ஸ்தான சஞ்சாரத்தால் நல்ல தனலாபம் கிடைப்பதோடு ஸ்தான பலமும் உண்டாகும். புதிதாக வீடு, மனை ஆகியன வாங்கும் யோகம் கிட்டும். பூர்வீக சொத்தினை விற்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். புதிய சேமிப்புகளில் ஆர்வம் பிறக்கும். மியூச்சுவல் பண்ட்ஸ், ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் அதிக கவனம் தேவை. பேராசை பெருநஷ்டம் என்பதை உணர்ந்து முதலீடு செய்யுங்கள்.

குடும்பம் : உடன்பிறந்த சகோதரர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். முன்னோர்களின் சொத்துக்களில் இருந்த பாகப்பிரிவினை பிரச்னைகள் சுமுகமான முடிவினை எட்டும். சுபநிகழ்ச்சிகளில் முன் நின்று செயல்படுவீர்கள். உறவினர் ஒருவரின் வருகை குடும்பத்தில் சலசலப்பை உண்டாக்கும். பிள்ளைகளின் செயல்பாட்டால் பெருமை தேடி வரும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் வெற்றியைத் தரும்.

கல்வி : மாணவர்களின் அறிவுத்திறன் கூடும். கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். ஞாபகமறதி பிரச்னை நீங்கும். கூடுதலான எழுத்துப் பயிற்சியும், நண்பர்களோடு இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப் பயிற்சியும் அதிக நன்மை தரும். பள்ளி, கல்லுாரிகளில் நடைபெறும் போட்டிகளில் முதலிடம் பிடிப்பீர்கள். வேதியியல், மருத்துவம், எலக்ட்ரிகல், கேட்டரிங் டெக்னாலஜி துறை சார்ந்த மாணவர்கள் சிறப்பிடம் பெறுவார்கள்.

பெண்கள் : குடும்பப் பெரியவர்களின் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். குடியிருக்கும் வீட்டினை சுத்தமாக வைத்துக் கொள்வதில் சிறப்பு கவனம் கொள்வீர்கள். வீட்டினில் தங்கம், வெள்ளியிலான பொருட்கள் சேரும்.  குடும்பத்தில் நடக்கும் விசேஷங்களின் போது உங்களது நிர்வாகத் திறன் வெளிப்படும். அடுத்த வீட்டுப் பெண்களுக்கு உதவி செய்யப்போய் வீண் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள நேரிடலாம். கணவரின் பணிகளுக்கு பக்கபலமாக துணை நிற்பீர்கள். பொறுப்புகளை சரிவர நிறைவேற்றி நற்பெயர் காண்பீர்கள்.

உடல்நலம் : டிசம்பர் 31 வரை உடல்நிலையில் ஒரு சில உபாதைகளை சந்திக்க நேரிடும். தைராய்டு, கொழுப்பு சார்ந்த பிரச்னைகள் உள்ளோர் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உணவுக் கட்டுப்பாடு என்பது உடல்நலத்திற்கு நல்லது. உடல்சூடு அதிகமாவதால் ஒரு சிலருக்கு கண்களில் இருந்து நீர் வடியக்கூடும். கவனம் தேவை.

தொழில் : அரசுப் பணியாளர்கள் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவார்கள். மருத்துவம், சட்டம் ஒழுங்கு, கல்வித்துறை சார்ந்தோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். ஏற்றுமதி, இறக்குமதி, கேட்டரிங், தரகுத் தொழில் செய்பவர்கள் குறிப்பிடத்தகுந்த லாபத்தினை அடைவார்கள். ஒரு சிலர் வேலை செய்யும் நிறுவனம் மூலமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பினை அடைவர். பெட்டிக்கடை, குடிசைத்தொழில், தின்பண்டங்கள் விற்பனை போன்ற சிறுதொழில் செய்வோர் பெருத்த அளவில் முன்னேற்றம் காண்பார்கள். தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்ள சரியான நேரம் இது. தொழிலதிபர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களால் நன்மை அடைவார்கள். 

👍 பரிகாரம் 💐
புதனன்று  சரஸ்வதியை வழிபடுங்கள்.  கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானுக்கு அரளி மாலை சாற்றுங்கள்.
அதிர்ஷ்ட ஹோரைகள் சூர்யன், செவ்வாய், குரு
அதிர்ஷ்ட கிழமைகள் புதன், வெள்ளி
திசைகள் மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு
நிறங்கள் நீலம், பச்சை
எண்கள் 1, 5, 6


குரு பகவான் காயத்ரி மந்திரம்:

ஓம் விருஷபத் வஜாய வித்மஹே

க்ருணீ ஹஸ்தாய தீமஹீ

தந்நோ குரு ப்ரசோதயாத்

குருவாகிய அவர் தீமைகளை அகற்றி, நன்மைகளை வழங்கி காத்து அருள்வார் என்பது இதன் பொருள்.

ஆலயங்களில் நவக்கிரக வழிபாடு செய்யும் பொழுது, குருவுக்கு உரிய குரு காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபட்டால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பது சாலச்சிறந்தது.

இந்த காயத்ரி மந்திரத்தை சொல்வதால் நீண்ட ஆயுள் உண்டாகும். அஞ்ஞானம் அகலும். அரசுப் பதவிகள் கிடைக்கும். வறுமை நீங்கும். மெய்ஞானம் உண்டாகும். சேமிப்பு வளரும். உடல் வலிமையும், உள்ள வலிமையும் ஏற்படும். சாதனைகள் புரிய வாய்ப்புகள் அமையும்.


குரு சுலோகம் :

குரு பிரம்மா குரு விஷ்ணு

குரு தேவோ மகேஸ்வர;

குரு சாஷாத் பரப்பிரம்மா

தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

இதை வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஜெபிக்கலாம் என்றாலும் வியாழன் அன்று காலை மற்றும் மாலை வேளைகளில் 108 முறை கூறி வழிபட நீங்கள் புதிதாக கற்றுக்கொள்ளும் எந்த ஒரு விடயத்திலும் வெற்றி பெறுவீர்கள். மேலும் உங்களுக்கு “பிரம்மா, விஷ்ணு, சிவன்” என்ற மூன்று கடவுளர்களின் ஆசியும் கிட்டும்.

குரு மந்திரம் :

தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச

குரும் காஞ்சன ஸந்நிபம்

புத்தி பூதம் திரிலோகேஸம்

தம் நமமி பிருகஸ்பதிம்

இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் 9 முறை அல்லது 27 முறை துதிப்பது நல்லது. 

வியாழக்கிழமைகள் தோறும் கோவிலில் குரு பகவான் சன்னிதிக்குச் சென்று, குரு கிரக விக்ரகத்திற்கு 27 மஞ்சள் கொண்டைகடலைகள் சமர்ப்பித்து, நெய் தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, இந்த மந்திரத்தை 108 முறை துதித்து வந்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். வேலை வாய்ப்புகள் மற்றும் அரசியல் வாழ்வில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிட்டும். குடும்பத்தில் வீண் விரயங்கள் நீங்கி பொருளாதார நிலை மேம்படும்.

முழுபலனும் சுய ஜாதகத்தின் அடிப்படையிலேயே கோச்சார பலன்கள்  கிடைக்கும்... மற்றும் மாறுபடும்...

No comments

Thank you for your comments