Breaking News

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிப்பு

சென்னை,

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை எழிலகத்தில் அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எழும்பூர், கொளத்தூர், பெரம்பூர், புரசவைவாக்கம், வில்லிவாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 

சென்னையில் மழை பாதித்த இடங்களை ஆய்வு செய்து தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டேன்.

வடசென்னையை தொடர்ந்து தென்சென்னையிலும் இன்று மழைசேதங்களை ஆய்வு செய்கிறேன். மீட்பு பணிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுமார் 50 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி, வருவாய் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்ள கூறியுள்ளேன். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பணியாளர்கள் இரவு பகல் பாராமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 160 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மோட்டார் பம்புகள் மூலம் சுமார் 500 இடங்களில் தேங்கி உள்ள மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஒரே நாளில் குறுகிய காலத்தில் அதிகளவு மழை பெய்துள்ளது; அதுவே தண்ணீர் தேக்கத்திற்கு காரணம். செம்பரம்பாக்கம் ஏரி 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  சென்னையில் ஒரே நாளில் 20 செ.மீட்டருக்கு அதிகமாக மழை பெய்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 2  நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர் மக்கள் சென்னை வருவதை 2 லிருந்து 3 நாட்கள் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Thank you for your comments