Breaking News

2015ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரேநாளில் கொட்டிய கனமழை... வெள்ளக்காடாக மாறிய சிங்கார சென்னை

சென்னை,

சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது...  தீவுகள் போல் காட்சி அளிக்கிறது..

நேற்றிரவில் இருந்து இன்று காலை 12 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக 23 செ.மீட்டர் கனமழை கொட்டித்தீர்த்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்து வந்தது. இதனிடையே தென்மேற்கு வங்க கடல் அதனையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது. 

இதை அடுத்து டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்ததோடு தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இந்த தொடர் மழையால் சென்னையின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு முழுக்க பெய்த மழை காரணமாக பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. 

சென்னை எம்எம்டிஏ காலனி பகுதியில் சாலையில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் வாகனங்கள் ஒரு பக்கமாக செல்கின்றன. இதன் காரணமாக அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஈக்காட்டுதாங்கல் பகுதியிலும் சாலைகளில் வெள்ளநீர் தேங்கி வெள்ளக்காடாக காணப்படுகிறது. 

சென்னை கோட்டூர் பகுதியில் சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் வழிந்து ஓடுகிறது. வில்லிவாக்கம் பகுதியில் சாலையில் வாகனங்கள் மூழ்கும் அளவிற்கு வெள்ளநீர் தேங்கி உள்ளது. வடபழனி, கிண்டி, தி நகர், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், போரூர், வளசரவாக்கம், குரோம்பேட்டை, நங்கநல்லூர், போரூர், மதுரவாயல், பூந்தமல்லி, மதுரவாயல், குன்றத்தூர், வளசரவாக்கம், ஆவடி பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பாதுகாப்பு கருதி சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நந்தம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கோயம்பேடு, வடபழனி பகுதிகளில் லேசான மழையும் மழை, கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை,மாங்காடு, மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. 

பல இடங்களில் முட்டிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் மேற்கு மாம்பலத்தில் இருந்து தி.நகர் செல்லக்கூடிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதையில் வெள்ள நீர் தேங்கியதால் பாதை மூடப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் போக்குவரத்து பயன்பாடு குறைந்து காணப்பட்டாலும் தீபாவளி பண்டிகை முடிந்து ஊருக்கு பலரும் திரும்பி வருவதால் அந்த பகுதிகளில் மட்டும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. 

தற்போது பெய்த மழைக்கே சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பல்வேறு இடங்களில் வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் குடியிருப்புகள் தீவுகள் போல் காட்சி அளிக்கிறது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்துள்ளது.

நீர் இருப்பு அதிகரிப்பு காரணமாக புழல் ஏரியில் இருந்து 2 மதகுகள் வழியாக தலா 250 கன அடி என மொத்தம் 500 கன அடி நீர் இன்று காலை 11 முதல் திறந்துவிடப்பட்டது. தற்போது மேலும் 250 கன அடி அதிகரித்து மொத்தமாக 750 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நீர்நிலைகள் அருகே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களூக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இந்த எச்சரிக்கை சென்னை வாழ் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தற்போது பெய்த மழைக்கே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரெட் அலர்ட்படி கூடுதல் மழை பெய்தால் எப்படி இருக்கும்? என்று இப்போதே அச்சத்துடன் யோசிக்க தொடங்கி உள்ளனர்.

வரும் 9ஆம் தேதி தான் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை பெய்தால் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

நேற்றிரவில் இருந்து இன்று காலை 12 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக 23 செ.மீட்டர் கனமழை கொட்டித்தீர்த்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக டி.ஜி.பி. அலுவலகப் பகுதியில் 23 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கம் மற்றும் அம்பத்தூரில் 21 செ.மீட்டர், அயனாவரத்தில் 18 செ.மீட்டர், எம்.ஜி.ஆர். நகரில் 17 செ.மீட்டர், அண்ணாநகரில் 16 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

20 செ.மீட்டருக்கு அதிகமாக மழை பெய்தால் அதி கனமழை எனக் கணக்கீடப்படும். அதன்படி சென்னையில் அதி கனமழை பெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டுக்குப்பின் அதி கனமழை பெய்துள்ளது.

பிரபல இயக்குனர் சேரன்  அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது கருத்துக்களை பதிவிட்டு வந்த சேரன் தற்போது வெளிப்படையாக எதிர்க்கட்சியை விமரிசித்துள்ளார்.

2015-ம் ஆண்டு மழையை யாராலும் மறந்திருக்கவே முடியாது. பெரும் சேதத்தை ஏற்படுத்திய அந்த பாதிப்பிற்கு பிறகு மழை நீர் தேங்காமல் இருக்க அன்றைய அதிமுக அரசால் திட்டம் தீட்டப்பட்டதோடு அதற்காக மத்திய அரசிடம் இருந்து  நிதியும் பெறப்பட்டுள்ளது.

ஆனாலும்  மீண்டும் 5 வருடம் கழித்து பெய்து வரும் பெரும் மழை முந்தைய பாதிப்புகளையே கண்முன்னே நிறுத்தி வருகிறது. இது தொடர்பாக தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் சேரன்;

மழை பாதிப்பு வந்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேற திட்டம் தீட்டி சென்னைக்கு மட்டும் மத்திய அரசிடம் 900 கோடிக்கு மேல் வாங்கினார்களே முந்தைய ஆட்சியில்... இதுதான் அந்த திட்டத்தில் செயல்படுத்திய நகரமா.. இந்த ஃபைல முதல்ல எடுங்க முதலமைச்சர் அய்யா.  என பதிவிட்டுள்ளார்.

நெட்டீசன்களும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறைந்தபட்ச உள்கட்டமைப்பை கூட ஏற்படுத்தாதன் விளைவே இன்று சென்னை மிதந்து கொண்டிருக்கிறது.

ஊழல் எனும் கொடிய புரையோடிய நோயின் விளைவுகள் இது. . .

என்று பலவாறு அதிமுக அரசின் ஊழலை பதிவிட்டு வருகின்றனர்.


No comments

Thank you for your comments