கடும் அமளிக்கு இடையே விவசாயச் சட்டங்கள் வாபஸ் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்...!
புதுடெல்லி, நவ. 29:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு இன்று (29/11/2021) நிறைவேற்றியது.
மத்திய அரசின் விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஒரு வருஷ காலமாக போராடி வருகிறார்கள். மத்திய அரசின் அமைச்சர்களுடன் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் நடத்திய பேச்சு வார்த்தைகளும் பலனளிக்கவில்லை.
மத்திய விவசாய சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்தப் பின்னணியில் குருநானக் பிறந்த தினமான நவம்பர் 19ஆம் தேதியன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி திடீர் என்று மத்திய அரசு விவசாய சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளது என்று கூறினார்.
அவரது அறிவிப்பை ஏற்று மத்திய அமைச்சரவை விவசாய சட்டங்களை ரத்து செய்வதற்கு ஒப்புதல் வழங்கியது.
இதன்படி நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை அன்று மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களை ரத்து செய்வதற்கான திருத்த மசோதாவை அவையில் தாக்கல் செய்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். மேலும், முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அவையே 12:19 வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
ஒத்தி வைப்புக்கு பின்னர் கூடியதும் மக்களவையில் இருந்து ராஜினாமா செய்ததாக மேற்குவங்க உறுப்பினர் பாபுல் சுப்ரியோ தாக்கல் செய்திருந்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்வதாக அவைத்தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
பின்னர் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மத்திய விவசாய சட்டங்களை ரத்து செய்வதற்கான திருத்த மசோதாவை தாக்கல் செய்யும்படி அவைத்தலைவர் கேட்டுக்கொண்டார்.
எதிர்க்கட்சிகளின் கோஷங்களுக்கு இடையே விவசாய சட்டங்கள் மூன்றையும் ரத்து செய்வதற்கான திருத்த மசோதாவை நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்து பேசினார்.
மக்களவையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் எந்த சிக்கலும் இல்லாமல் விவசாய சட்டங்களை ரத்து செய்வதற்கான திருத்த மசோதா நிறைவேறியதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
மேலும், வேளாண் சட்ட ரத்து மசோதாவை விவாதிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கையையும் சபாநாயகர் நிராகரித்தார்.
விவசாய சட்டங்களை ரத்து செய்யும் திருத்த மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து அவையை நடுப் பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
மாநிலங்களவையில் அறிவிப்பு
மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை தொடங்கியதிலிருந்து கோஷங்கள் எழுப்பி வந்தனர்.
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார்.
மாநிலங்களவையில் மத்திய விவசாய சட்டங்கள் 3ம் ரத்து செய்ததற்காக நிறைவேற்றப்பட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் பகல் 2 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என்று பிரகலாத் ஜோஷி குறிப்பிட்டார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோஷங்களுக்கு மத்தியில் அவையை பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.



No comments
Thank you for your comments