Breaking News

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு

மதுரை:

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.



வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த பாலமுரளி, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு மொத்தமாக 20 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதில் 10.5 சதவீதத்தை வன்னியர் சமுதாயத்தினருக்கு உள்ஒதுக்கீடாக வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றியது.

இதனால் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பிரிவில் உள்ள பிற சமுதாயத்தை சேர்ந்த மக்களின் கல்வி, வேலை, எதிர்காலம் அனைத்தும் கேள்விக் குறியாகிவிட்டது. முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

எனவே வன்னிய சமுதாயத்தினருக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்து, அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதே கோரிக்கையுடன் 20-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரையின்பேரில் நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் ஆகியோர் கடந்த சில வாரங்களாக மதுரை உயர்நீதிமன்றத்தில் நாள்தோறும் விசாரித்தனர்.

விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீதத்தை வன்னியர்களுக்கு வழங்கி இருப்பது, சட்டத்துக்கு முரணான இட ஒதுக்கீடாக உள்ளது.

சாதி ரீதியான கணக்கெடுப்புகள் முறையாக நடத்தப்படவில்லை. தேர்தல் ஆதாயத்திற்காக ஒரு சமுதாயத்தினரை முன்னிறுத்தி சட்டமன்றத்தில் இந்த தீர்மானம் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் உள்ள மற்ற சாதி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வாதாடினர்.  பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த வாரம் நீதிபதிகள் ஒத்திவைத்து இருந்தனர்.

இந்தநிலையில் இன்று காலையில் அதே நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கினர்.  

அதில் கூறியிருந்ததாவது, 
மிகவும் பிற்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடாக வன்னியர்களுக்கு 10.5 சதவீதத்தை ஒதுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாத சூழ்நிலையில் இதுபோன்ற அரசாணை பிறப்பிக்கலாமா? 

சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா? 

முறையான அளவுசார் தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீடு வழங்க இயலுமா? 
என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகிறது.

இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு அளித்த பதில்கள் ஏற்றுக்கொள்பவையாக இல்லை. இந்த அரசாணை அரசியலமைப்பு சட்டங்களுக்கு எதிரானதாக உள்ளது.

எனவே வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை மற்றும் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன.

இந்த அரசாணையின் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசுப்பணிகளில் உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்குமாயின் அவை நிறுத்தி வைக்கப்படுகின்றன. 

இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
 

🔥Also Read தொடர்புடைய செய்தி: வன்னியர்களுக்கு 10.5% கல்வி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தமிழக அரசு, அரசாணை வெளியீடு

 

No comments

Thank you for your comments