வன்னியர்களுக்கு 10.5% கல்வி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தமிழக அரசு, அரசாணை வெளியீடு
சென்னை
தமிழ்நாட்டில் உள்ள வன்னியர்களுக்கு 10.5%, சீர் மரபினருக்கு 7%, மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு 2.5% சிறப்பு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி சேர்க்கையில் சிறப்பு ஒதுக்கீடு. 2021 பிப்ரவரி 26ம் தேதி முதல் செயல்படுவதற்கான அரசு ஆணையை வெளியிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:
அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20% இட ஒதுக்கீட்டிற்குள்ளாக, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கித் தமிழ்நாடு சட்டம் 8/2021 இயற்றப்பட்டது.
அச்சட்டத்தின் அடிப்படையில், அரசுப் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் இனச் சுழற்சி முறையைத் திருத்தி அமைக்க, சட்ட வல்லுனர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் உறுதி அளித்திருந்தார்.
அதன்படி, சட்ட வல்லுநர்கள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டை 26-2-2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள்.
இது மட்டுமின்றி, இந்த ஆண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்விச் சேர்க்கைகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான மேற்கூறிய புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு, அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments
Thank you for your comments