Breaking News

ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆட்டத்தை முடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை, அக்.25-

தமிழக அரசின் போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி இனிப்புகள் வழங்கும் திட்டதுக்கு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விட அமைச்சரின் மகன் திட்டமிட்டதாக தகவல் கசிந்தது. விஷயமறிந்து அனைத்து டெண்டரையும் ரத்து செய்து அதிரடியாக  உத்தரவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும் தமிழக அரசின் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான தீபாவளி ஸ்வீட்டை ஆவின் நிறுவனத்திடமே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனால் தனியார் நிறுவனம் ஒன்றிடம் டெண்டருக்கு கமிஷன் பேசியிருந்த அமைச்சர் குடும்பம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று நான்கு மாதங்களை கடந்துவிட்டது. தற்போது வரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் நலத்திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் என பல்வேறு விஷயங்களில் தமிழக அரசு பொதுமக்களிடம் நற்பெயர் பெற்றுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகள் ஊழலற்ற நேர்மையான அரசை தமிழக மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. 

🔥Also Read
👆ஹோட்டல்களில் சுகாதாரமற்ற நிலையில் உணவு விநியோகம்! 
ஆனால் கடந்த சில வாரங்களாக நடைபெறும் நிகழ்வுகள் ஸ்டாலினை கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிகிறது. உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் திமுகவினரின் செயல்பாடுகள் மற்றும் எம்.பிக்கள், அமைச்சர்களின் நடவடிக்கைகள் சர்ச்சையாக வெடித்துள்ளன. இரவும் பகலும் உழைத்து மக்களிடம் வாங்கிய நற்பெயரை இதுபோன்ற செயல்கள் கெடுத்துவிடும் என்று கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளாராம். 

இந்நிலையில் திமுக அரசின் முதல் ஊழல் என்ற வகையில் தீபாவளி ஸ்வீட் டெண்டர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது, போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளியை ஒட்டி ஸ்வீட் வழங்குவது வழக்கம். மொத்தம் 100 டன் இனிப்புகள் வாங்க டெண்டர் விடும் நடைமுறை இருந்து வருகிறது.

ஆவின் நிறுவனமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில்  நடப்பாண்டிற்கான இனிப்புகள் வாங்கும் டெண்டரை ஆவின் நிறுவனத்திற்கு அளித்தால் பெரிய தொகையை மிச்சப்படுத்தலாம். மற்றொரு அரசு நிறுவனம் வளர உதவிகரமாக இருக்கும் என்று அதிகாரிகள் சிலர் யோசனை தெரிவித்துள்ளனர். 

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரு கிலோ நெய் ஸ்வீட் ரூ.500 என்ற அடிப்படையில் தனியார் நிறுவனத்திடம் டெண்டர் வழங்கப்பட்டது. அதேநேரத்தில் ஸ்வீட்டுகளை தயாரிக்கும் ஆவின் நிறுவனத்தை கண்டுகொள்ளாமல் ஒதுக்கி வைத்தனர். தற்போதைய திமுக ஆட்சியிலும் முந்தைய அதிமுக அரசின் பாணியை கடைபிடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

தீபாவளி இனிப்புகளை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு டெண்டர் தர வேண்டும் என  போக்குவரத்து துறை அமைச்சர் குடும்பத்தின் தலையீடு இருந்ததாம். அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்திடம் இனிப்புகளை கொள்முதல் செய்தால் அந்நிறுவனத்துக்கு கூடுதல் லாபம் கிடைக்குமே என்கிற அதிகாரிகளின் யோசனையை அமைச்சரின் குடும்பம் நிராகரித்துவிட்டதாம். அத்துடன் அந்த தனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்வதற்காகவே டெண்டர் விதிகளும் அமைச்சர் குடும்பத்தின் தலையீட்டால் மாற்றப்பட்டதாம். இதனையும் அதிகாரிகள் எதிர்த்துள்ளனர். ஒரு நிறுவனத்துக்கு சார்பாக இப்படி டெண்டர் விதிகளை மாற்றினால் சட்ட சிக்கல்கள் வரும் என்றும் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். ஆனாலும் அமைச்சர் குடும்பத்தினர் இதனைப் பற்றி கவலைப்படவில்லை என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

அதற்குள் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களின் மகன் திலீப் உள்ளே புகுந்து ஆட்டத்தை மாற்றியுள்ளாராம். ஸ்வீட் டெண்டரை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தனியார் நிறுவனத்துடன் பேசியதாக, அதில், ஒரு கிலோ ஸ்வீட்டை 600 ரூபாய்க்கு டெண்டர் பேசியிருப்பதாகவும், அதற்காக தனக்கு 30 சதவீதம் கமிஷன் வர வேண்டும் என்று கேட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. 

இதுதொடர்பான வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பில் ஏலத்தில் கலந்துகொள்ள தகுதியான நிறுவனங்கள் ஆண்டிற்கு 100 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்திருக்க வேண்டும். அதற்கான உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டிருந்தன. இந்த நிலையில் ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விசாரணை நடத்தி இருக்கிறார். உடனே அனைத்து டெண்டர்களையும் ரத்து செய்ய அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து போக்குவரத்து ஊழியர்களுக்கான தீபாவளி இனிப்புகளை ஆவின் நிறுவனத்திடம் இருந்து தான் வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாராம்.

இதனால் கமிஷன் தொகை லம்ப்பாக கிடைக்கும் என கனவில் மிதந்த அமைச்சர் குடும்பம் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments

Thank you for your comments