Breaking News

ஹோட்டல்களில் சுகாதாரமற்ற நிலையில் உணவு விநியோகம்! ஆழ்ந்த உறக்கத்தில் அதிகாரிகள்..! - விழித்துக்கொள்வார்களா..?

 வேலூர், அக்.25-

வேலூரில் உள்ள சில ஹோட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாராவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது. சுகாதார துறையினர், ஹோட்டல்களில் முறையான ரெய்டு நடத்தாததால் விதி மீறல்கள் அதிகரித்து உணவு விஷமாகும் அபாயம் உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர். 

தற்போது எல்லாவற்றிலும் கலப்படம் என்ற நிலை அதிகமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக தற்போது உணவுப் பொருட்களில் கலப்படம் என்பது அதிகமாக நிலவுகிறது, குறிப்பாக இறைச்சி கடைகளில் அதிகம் கலப்படம் நிகழ்வதும் தெரியவருகிறது. அதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு ஹோட்டல்களில் கெட்டுப்போன உணவுகள் என கண்டு கொள்ளாமல் விற்பனை செய்வதும் அவ்வப்போது சோதனையில் கண்டறியப்படுகிறது.

இன்றைய அவசர வாழக்கையில் வீட்டில் உடனடியாக சமைக்க முடியாத விதவிதமான உணவுகளை ஹோட்டல்களுக்குச் சென்று உண்ணுவது வாடிக்கையாகி விட்டது. அதுமட்டுமின்றி குடும்பத்துடன் ஹோட்டல்களுக்குச் சென்று உணவருந்துவது என்பது இன்றைக்கு தவிர்க்க இயலாததாக பேஷனாக மாறிவிட்டது. 

வேலூரில் பொழுபோக்கு என்றால் சினிமா செல்வது மற்றும்  ஹோட்டல்களுக்குச் சென்று உண்பதுதான்... இதை சாதகமாக பயன்படுத்துகின்றனர் வேலூரில் இயங்கும் பெரும்பாலான ஹோட்டல்கள்..

இந்நிலையில், வேலூரில் பெரும்பாலான ஹோட்டல்களில், சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாராவதாகவும்,  சுகாதாரம் கடைபிடிக்கப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.

சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவை உண்பதால், பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு உட்பட பல்வேறு வயிற்று உபாதைகள் ஏற்படுகின்றன. அங்கு உண்போருக்கு உடல் நலம் கேள்விக்குறியாக உள்ளது.

வேலூர் மாவட்டத்தில், பெரிய ஹோட்டல்கள், சிறிய ஹோட்டல்கள், சாலையோரக் கடைகள் என ஏராளமான உணவகங்கள் உள்ளன. இந்தக் கடைகளில் சைவ, அசைவ சாப்பாடு, இட்லி, தோசை, பொங்கல், பூரி கிழங்கு, பரோட்டா, பிரியாணி என, காலை, பகல், இரவு நேரங்களில் சைவ, அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

குறிப்பாக வேலூரில் சிஎம்சி மருத்துவமனை, ஸ்ரீபுரம் தங்கக்கோயில், வேலூர் கோட்டை ஆகிய இடங்கள் சுற்றுலா ஸ்தலமாக இருப்பதால், வெளியூர்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.அவ்வாறு வரும் சுற்றுலா பயணியர் காலை, பகல், இரவு நேரங்களில் ஹோட்டல்களையே நாடுகின்றனர். ஆனால், பெரும்பாலான ஹோட்டல்களில் சுகாதார மற்ற நிலையே உள்ளது. 

ஹோட்டல்களில் கழுவப்படாத டம்ளர், சுத்தம் செய்யப்படாத குடிநீர் தொட்டி, வாழை இலைக்கு பதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பேப்பரில் உணவு சப்ளை போன்றவை இன்றும் தொடர்கதையாக உள்ளது....  என்பது வேதனையாக உள்ளது...

அதுமட்டுமின்றி முறையாக சுத்தம் செய்யதா பிளாஸ்ட்டிக் தட்டுகள் பயன்படுத்துக்கின்றனர். அவ்வாறு பயன்படுத்தும் தட்டுகளையும் தண்ணீர் தொட்டியில் முக்கியெடுத்து அப்படி எடுத்து மீண்டும் பயன்படுத்துபடுகின்றன. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. 

சாலையோர கையேந்திபவனிலே சுகாதாரமான தரமான உணவுகள் வழங்குகின்றனர்... தட்டுகளில் இலை பயன்படுத்துகின்றனர். ஆனால்   கொள்ளை லாபம் பார்க்கும் சில பிரபல ஹோட்டல்களில் சுகாதாரத்தை கடைப்பிடிப்பதில்லை....

🔥 Also Read

காலச்சக்கரம் நாளிதழ் E -Paper 25-10-2021

கொரோனா தொற்று காலத்திலும் முறையாக சுத்தப்படுத்தாமல் பிளாஸ்டிக்   தட்டுகள் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு கொரோன காலத்தில் பிளாஸ்டிக் தட்டுக்களை பயன்படுத்தினாலும் அதில் இலை உபயோகிக்க வேண்டும்... அதுவே கொரோனா தொற்றுக்கு எதிரான சிறந்த நடவடிக்கை. ஆனால் சுகாதாரமற்ற முறையிலேயே தட்டுகள் பயன்படுத்துகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உண்ணும் நிலை உள்ளது... தொற்று பரவும் அபாயமும் உள்ளது என்பதே நிதர்சனம்... இதனை தடைசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளது. 

ஒரு சில பெரிய ஹோட்டல்களில் சாப்பிடும் இடத்தை, மிகவும் சுத்தமாக வைத்துக் கொண்டாலும், உணவு தயாராகும் இடங்கள் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் தான் காணப்படுகின்றன.

பாத்திரங்களை முறையாகக் கழுவுவதும் கிடையாது. உணவுப் பண்டங்களில் ஈ மொய்த்த வண்ணம் உள்ளன. வடை, சிக்கன் வறுவலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய், மீண்டும் மீண்டும் பிற சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 

அதுமட்டுமின்றி பெரும்பாலான ஹோட்டல்களில், மலிவானவிலையில் இறந்த கோழிகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ரசாயனம் கலந்த மீன்களை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சிக்கன் லாலிபாப் போன்ற உணவுகளுக்கு புட் கலர் பயன்படுத்தப்படுகிறது. இதனால புட் பாய்சன் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. ரசாயணம் கலந்த உணவு என்பது ஸ்லோ பாய்சனாக மாறி பல நோய்களை உருவாக்கி மனிதர்களை சிறுகச் சிறுக கொல்கின்றன. 

இதுபோன்ற உணவகங்களை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டறிந்து, வரைமுறை செய்ய வேண்டும். 

உணவில் கலப்படம், சுவை கூட்டும் ரசாயணம் என்று சுகாதாரமற்ற உணவு என்றால்... தற்போது உணவு வழங்கும் தட்டிலும் சுகாதார கேடு என்றால்... பார்சல் வாங்கினாலும்... அதலும் சுகாதார கேடு... என்ன செய்வது..?

நேற்று ஒருவர் சுமோட்டோ ஆப் வாயிலாக டார்லிங் நம்ம வீட்டில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.  பிரியாணியும் டெலிவரி ஆனது... ஆனால் ஸ்வீட் பாக்ஸ் போன்ற அட்டையில் உணவு பார்சல் வினியோகம் செய்துள்ளனர். அந்த அட்டைபெட்டியில் எண்ணெய் ஊறி அதில் அட்டை துகள்களும் கலந்து சுகாதாரமற்ற முறையில் இருந்தது. உணவு சூட்டால் அந்த அட்டைபெட்டி நெளிந்து சுகாதாரமற்றதாக இருந்தது.  

இதுகுறித்து,  கிரின் சர்கிலில் உள்ள டார்லிங் நம்ம வீட்டில் கேட்டதற்கு அங்குள்ள மேலாளர் அப்படிதான் கொடுக்கப்படும் என்றும் தங்க தட்டிலா கொடுக்கப்படும் என்று வாடிக்கையாளரிடம் முறை தவறி பேசி உள்ளனர்...  

எங்கே செல்கின்றன சுகாதாரம்... புறகணிக்கப்டுகின்றனவா விதிமுறைகள்... என்ற பல்வேறு கேள்விகள் இங்கே எழுகின்றன....  இது போன்ற செயல்களுக்கு முக்கிய காரணம் அதிகாரகள் “ப” வைட்டமின் பெற்றுகொண்டு கண்டும் காணாமல் விட்டுவிடுவதே என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்... 

புறகணிக்கப்படும் விதிமுறைகள்

உணவு தயாரிக்க, குடிக்க சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீரையே பயன்படுத்த வேண்டும். வேலையாட்கள் கையுறை, தலையுறை, ஏப்ரான் அணிந்து, உணவுப் பொருட்களை தயாரிக்க வேண்டும். ஊழியர்களுக்கு மருத்துவச் சான்று கட்டாயம் இருக்க வேண்டும். அவ்வாறு பின்பற்றப்படுவதில்லை.

ஆனால்  அரசால் தடை செய்யப்பட்ட செயற்கை வண்ணங்களை, உணவு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தக் கூடாது. தின்பண்டங்களில் சில்வர் லீப், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்தக் கூடாது. ஆனால் பெரும்பாலான ஹோட்டல்களில் செயற்கை வண்ணங்கள், ஆபத்தை விளைவிக்கும் ருசிகூட்டும் பொருட்கள் பயன்படுத்துகின்றனர் என்பது மிகவும் வேதனையாக உள்ளது..

உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மட்டுமே வழங்குமாறு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் சில ஹோட்டல்களில் முறையாக கடைப்பிடிப்பது இல்லை. சுத்தகரிக்கப்பட்ட தண்ணீர் வேண்டுமென்றால் தனி விலை என்று அதுவும் வியாபாராமாக உள்ளது என்பதுதான் இப்போதைய அவலநிலை...

அதே போன்று கொரோனா கட்டுபாடுகளையும் எந்த உணவகத்திலும் முறையாக பின்பற்றுவதில்லை... மிக சில ஹோட்டல்களில் மட்டுமே பின்பற்றபடுகின்றன... பெரும்பாலான ஹோட்டல்களில் பின்பற்றபடுவதில்லை... கல்லா கட்டுவதில் தான் குறியாக உள்ளனரே தவிர வாடிக்கையாளர்கள் மீது அக்கறை கொள்வதில்லை... இந்த அவசர வாழக்கையில் தவிர்க்கமுடியாத ஒன்றாக விளங்கும் ஹோட்டல்ககளில் கூட்டம் அலைமோதுகின்றன... இருக்கையின்றி மக்கள் கூட்டமாக ஹோட்டல்களில் நிற்பதை காணமுடிகின்றன... 

இதைப்பற்றி கவலைப்படாத சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கண்துடைப்புக்காக மட்டும் ஆய்வு நடத்தி, அவ்வப்போது கணக்கு காண்பிப்பதாக கூறப்படுகிறது.  

யார் வாழ்ந்தால் எனக்கென்னடா...

யார் மடிந்தால் எனக்கென்னடா... 

அவசரமான உலகத்திலே...

தாயும் பிள்ளையும் ஆன போதிலும்...

வாயும் வயிறும் வேறடா... 

என்ற கொள்கையோடு ஆய்வு என்கின்ற பெயரில் “ப” வைட்டமின் பெற்றுகொண்டு “காசு பணம் துட்டு மணிமணி”  என்கின்ற நோக்கில்  கல்லா கட்டுகின்றனர் சிலர்... கண்துடைப்புக்காக மட்டும் அவ்வப்போது ஆய்வு நடக்கின்றன என்ற குற்றச்சாட்டும் பலர்தரப்பில் எழுந்துள்ளது. 

இதற்கு சான்றாகதான், கடந்த செப்டம்பர் மாதம் ஆரணியில் தனியார் அசைவ ஓட்டலில் பிரியாணி பரோட்டா, தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 10 வயது பெண் குழந்தை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலர் திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளனர். அவ்வப்போது இதுபோன்ற விபரீத நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் உள்ளன. 

ஏதேனும் விபரீத நிகழ்வுகள் நடந்தால் அப்போது மட்டும் அதிகாரிகள் பரபரப்பாக சோதனை செய்வார்கள், நடவடிக்கை எடுப்பார்கள்... அவ்வளவுதான்... அடுத்து வழக்கம்போல் “பழைய குருடி கதவை திறடி” என்று அவர்கள் பாணியில் பணியாற்றுகிறார்கள் என்று பொதுமக்கள் புலம்பும் நிலையே இன்றும் தொடர்கதையாக உள்ளது... அசம்பாவிதம் நடந்தபின் நடவடிக்கை எடுப்பதை கைவிடவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி ஹோட்டல்கள் உரிமையாளர்களோ சங்கத்தில் உள்ளோம்... என்ற ரீதியில்  உணவில் கலப்படம் செய்வதாகவும் கூறப்படுகிறது... ஏதேனும் விபரீதம் நடந்தாலும் சங்கம் என்ற தைரீயத்தில் மக்களை கொல்லுகின்றனர்.

வருமுன் காப்போம் ரீதியில் ஹோட்டல், பேக்கரி, டீ கடைகளில் பாதுகாப்பான முறையில் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறதா? 

சுத்தமான பொருட்களை பயன்படுத்து கிறார்களா? 

போலி டீ தூள் பயன்படுத்தப்படுகிறதா? 

பாலில் அடத்திக்காக பவுடர் மற்றும் ரசாயன கலவை லிக்விட் கலக்கப்படுகிறதா? 

என்பது குறித்து அவ்வப்போது ஆய்வு செய்ய மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் முன்வர வேண்டும். பெரும் ஆபத்து ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், மாவட்டம் முழுவதும், அதிரடி சோதனை செய்து சுகாதாரமற்ற முறையில் இயங்கும் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.  

அது போன்ற ஹோட்டல்களுக்கு அபராதம் மட்டும் விதிக்காமல், அவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும், சீல் வைக்கவேண்டும்,  உரிமம் ரத்து செய்யவேண்டும் என்று வலுவான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அன்பார்ந்த வாசகர்களே...!

உங்களின் ஹோட்டல் அ-னுபவங்களையும் நன்மை மற்றும் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் காலச்சக்கரம் நாளிதழ் வாயிலாக மற்றவர்களுக்கு நீங்கள் அறிவுறுத்தலாம்.. இது உங்களுக்கான தளம்... உங்கள் எண்ணம்... கருத்து... தெரிவிக்கவும்... சுயவிவரம் பாதுகாக்கப்படும்.. என்று உறுதி அளிக்கின்றோம்.. 

📧 மின்னஞ்சல்  👉  k24tamilnews@gmail.com

🎆 வாட்ஸ்அப் 👉   9360005566

🔥வேலூரில் சில ஹோட்டல்களில் நடைபெறும் தில்லாலங்கடி வேலைகள்! 

ஆதரத்துடன் அம்பலமாகும் பிற அதிர்ச்சி தகவல்கள்..!!

🔏 விரைவில்... நமது நிருபர் புலன் விசாரணையில்..?


No comments

Thank you for your comments