விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்
கன்னியாகுமரி அக்.21-
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் விவசாயிகள் பங்கேற்புடன் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் திரு.மா.அரவிந்த் தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். அணைகளின் நீர் இருப்பு விபரம், பெறப்பட்ட மழையளவு, விதைகள் மற்றும் தென்னங்கன்றுகளின் இருப்பு பற்றி மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி. எம்.ஆர்.வாணி அவர்கள் எடுத்துரைத்தார். கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 83 மனுக்களுக்கான பதில்கள் தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
மழைக்காலங்களில் சானல்கள் மற்றும் குளங்களில் ஏற்பட்ட உடைப்பு மற்றும் வெள்ள சேதங்களை தடுக்க செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கருத்துகள் தெரிவித்தனர். பொதுப்பணித்துறை மூலம் சானல்களில் தண்ணீர் வரத்து மற்றும் குளங்களை தூர் வாருதல், நீர்நிலை பராமரித்தல் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் போன்ற கேள்விகளுக்கு பதில்கள் தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
👮உறைய வைக்கும் Police Commemoration Day- வில் வீரவணக்கம் பாடல்...
முறிந்த இரப்பர் மரங்களை தனியார் காடுகள் சட்டத்தின்கீழ் வெட்டி அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தெரிவித்தார். அரசு நெல் நேரடி கொள்முதல் நிலையங்களிலுள்ள நடைமுறை சிக்கல்கள் பற்றிய கேள்விகளுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் துணை மேலாளர் விளக்கம் அளித்தார். குலசேகரம் பகுதியில் விவசாயிகளின் விளைபொருட்களை பாதுகாக்க குளிர் பதன கிட்டங்கி கட்டுதல் குறித்து தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் பதில் அளித்தார். விவசாயிகள் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்வதற்கு திங்கள்சந்தை பகுதியில் உழவர் சந்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இரப்பர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன செயல்பாடுகள் குறித்த கேள்விகளுக்கு வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) திருமதி. எம்.ஹானிஜாய் சுஜாதா பதில் அளித்தார்.
பேச்சிப்பாறையில் தொடங்கப்பட்டுள்ள தேனீ மகத்துவ மையத்தின் மேம்பாட்டுக்கான செயல்பாடுகள், பயிற்சிகள் மற்றும் அவற்றின் மூலம் விவசாயிகள் பயனடைய இருக்கும் வாய்ப்புகள் குறித்து தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி. ஷீலா ஜாண் பதில் அளித்தார். இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீடு தொகை பெற வாய்மொழி குத்தகைதாரர்களுக்கு கிராம நிர்வாக அலவலர்களிடமிருந்து பெறப்பட்ட சான்று போதுமானது என வேளாண்மை இணை இயக்குநர் திரு. எஸ்.சத்தியஜோஸ் விளக்கம் அளித்தார். சாலைகள் சீரமைத்தல் குறித்த கேள்விகளுக்கு நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் பதில் அளித்தார். வருவாய் துறை, கூட்டுறவுத் துறை, வனத்துறை, கால்நடைத்துறை, பால்வளத்துறை, ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வேளாண்மை இணை இயக்குநர் திரு.எஸ்.சத்தியஜோஸ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திருமதி. வசந்தி, மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.எம்.வீராசாமி, மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (விவ) திருமதி.எம்.ஆர்.வாணி, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் திரு.சுவாமிநாதன், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி. ஒய்.ஷீலா ஜாண், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) திருமதி. எம்.ஹானிஜாய் சுஜாதா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் (பொறுப்பு) திருமதி. சொர்ணலதா மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள், அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments