Breaking News

முத்துரங்கம் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் பெற்றோர்கள் தர்ணா..

வேலூர்:

இட ஒதுக்கீடு நிறைவடைந்து விட்டதை முறையாக அறிவிக்கப்படாததால் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம், வேலூர் ஓட்டேரியில் முத்துரங்கம் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை  தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் எம்.பி.சி(வி) என்ற 10.5  சதவிகித இட ஒதுக்கீட்டில் சேர அடுக்கம்பாறை, பாகாயம், ஆற்காடு, கலவை, திமிரி, கணியம்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப்புற ஏழை மாணவர்கள்  ஆர்வமுடன் கல்லூரிக்கு வந்தனர்.

ஆனால் கல்லூரி முதல்வர் அவர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீடு முடிந்துவிட்டதாக கூறி அவர்கள் கல்லூரியினுள் அனுமதிக்கவில்லை.

இதனால் ஏமாற்றமடைந்த மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோர்களுடன் கல்லூரி நுழைவாயிலில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள்.

அங்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர், இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  பின்னர் காவல் துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால் கல்லூரி கல்வி இணை இயக்குநர் காவேரி சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் பேசினார்.

முத்துரங்கம் அரசு கல்லூரியில் மேற்படி சமூகத்துக்கான இட ஒதுக்கீடு முடிந்துவிட்டது. ஆனால் மாதனூர் எம்.ஜி.ஆர் அரசு கலைக்கல்லூரியில் அதிக இடங்கள் காலியாக இருப்பதாகவும் அங்கு மாணவர்களை சேர்க்கலாம் என உறுதியளித்த பின்னர் மாணவ,மாணவிகள் கலைந்து சென்றனர்.

இது குறித்து முத்துரங்கம் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வரிடம் கேட்ட போது ஏற்கனவே எம்.பி.சி (வி) இட ஒதுக்கீடு சேர்க்கை முடிந்துவிட்டதாகவும் அறிவிப்புகள் சிறிய அளவில் ஒட்டப்பட்டதால் ஏற்பட்ட குழப்பம் எனவும் கூலாக கூறினார்.

அதன் பின்னர் பெரிய அளவிலான பலகையில் எவ்வளவு இட ஒதுக்கீட்டில் எந்தெந்த பிரிவினருக்கு இடங்கள் வழங்கப்பட்டுள்ளன என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பை முன்னரே செய்திருந்தால் வீண் பிரச்சனை வந்திருக்காதே என்று போலிசார் புலம்பினர்.

No comments

Thank you for your comments