தலைமீது வாக்குப் பெட்டிகளை சுமந்து சென்ற அதிகாரிகள்
ஆம்பூர், அக்.9-
வாணியம்பாடி அருகே மலை கிராமத்திற்கு 7 கிலோமீட்டர் தூரம் தலைமீது வாக்குப் பெட்டிகளை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெக்னாமலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் மொத்தம் 1673 வாக்காளர்கள் உள்ளனர். இதில் மலைப் பகுதியில் மட்டும் 527 வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் தரைப்பகுதியில் உள்ள புருஷோத்துமகுப்பம் என்ற பகுதியில் உள்ளனர்.
இவர்களுக்காக அமைக்கப்பட்டு மலைப்பகுதியில் ஒரு பூத்தும், கீழ்ப்பகுதியில் 2 பூத்துக்களும் உள்ளது.
மலையில் உள்ள 527 வாக்காளர்கள் ஒரே இடத்தில் வாக்களிக்க வேண்டும். சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் கடந்தும் இந்த மலை பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு முன்னாள் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் முயற்சியின் பேரில் தற்காலிக மண் சாலை 7 கிலோமீட்டர் தூரம் உள்ள மலை பகுதிக்கு அமைக்கப்பட்டது.
இந்த சாலை கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலை முழுவதும் அரித்தும், மண் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த தேர்தலின்போது ஒற்றையடிப் பாதையின் வழியாக கழுதைகள் மூலம் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டு வந்தது.
தற்போது உள்ள பாதையில் வாக்கு பெட்டிகள் மற்றும் உபகரணகளை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 7 கிலோ மீட்டர் தூரம் சுமந்து நடந்தே எடுத்து சென்றனர்.
மலை பகுதிக்கு முழுமையாக நடந்து செல்ல வேண்டி இருப்பதால் பெரும்பாலும் அதிகாரிகள் இங்கு செல்வதற்கு சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது விரைவில் சாலை அமைக்கப்படும் என்று கூறியிருந்தனர் என்பது குறிப்பிட தக்கது.

No comments
Thank you for your comments