வாழ்வே தொலைந்து விடும்: ஆசிரியர் பணி வயது வரம்பை நீக்க வேண்டும்! - டாக்டர் ராமதாஸ்
சென்னை:
லட்சக்கணக்கான பட்டதாரிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயித்து கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணையை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (06.10.2021) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் இதுவரை ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படாத நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் 40 வயதை கடந்தவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியாது என்று தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டது.
🔥Also Read 👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு
🔥Also Read 👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான அறிவிக்கை கடந்த மாதம் 9-ந்தேதி வெளியிடப்பட்ட நிலையில், அடுத்த இரு நாட்களில், அதாவது செப்டம்பர் 11-ந்தேதியே வயது வரம்பை தமிழக அரசு நீக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டேன். ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு என்ற அநீதியை தமிழக அரசு நீக்கும் என்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பட்டதாரிகளும், கல்வியாளர்களும் எதிர் பார்த்தனர். ஆனால், தமிழகத்தின் அனைத்து அரசு பணிகளுக்குமான வயது வரம்பை 2 ஆண்டுகள் உயர்த்தி கடந்த மாதம் 16ஆம் தேதி ஆணையிட்டதுடன் அரசு ஒதுங்கிக் கொண்டது. இது போதுமானதல்ல.
ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் அதே ஆசிரியர் தேர்வு வாரியம் தான் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்களையும் தேர்ந்தெடுக்கிறது.
ஆனால், விரிவுரையாளர் பணிக்கு எந்த வயது வரம்பும் நிர்ணயிக்கப்படாத நிலையில், அதற்கு முந்தைய நிலை பணியான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மட்டும் வயது வரம்பு நிர்ணயிப்பது எந்த வகையிலும் நியாயமற்றது.
உதாரணமாக, தமிழ்நாட்டில் 2011 முதல் 2020 வரையிலான பத்தாண்டுகளில் 2013, 2014, 2019 என மூன்று முறை மட்டும் தான் முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர். ஆனால், ஆண்டுக்கு ஆண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை.
பள்ளி அளவில் சரியான விகிதாச்சாரத்தில் ஆசிரியர்களை நியமிக்காத, ஆண்டு தோறும் ஆசிரியர் நியமனம் செய்யாத அரசுக்கு ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்க தார்மீக உரிமை இல்லை. இதில் தமிழக முதல்-அமைச்சருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. கடந்த ஆண்டு ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்ட போது அதை கடுமையாக எதிர்த்தவர்களில் அவரும் ஒருவர். ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை அகற்றுவதாக வாக்குறுதி அளித்தவர் அவர். அதனால், ஆசிரியர் பணிக்கு வயது வரம்பை அகற்ற வேண்டும் என்பதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்வார்.
எனவே, லட்சக்கணக்கான பட்டதாரிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயித்து கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணையை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments
Thank you for your comments