Breaking News

பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு

சென்னை :

பேனர்கள் வைப்பது முழுமையாக தடை செய்யும் வகையில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



விழுப்புரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. இல்லத் திருமண விழாவுக்கு வந்த அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 12 வயது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி பலியானான்.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு விழுப்புரத்தில் சட்ட விரோதமான பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கொடிக்கம்பங்கள் பேனர்கள் வைக்க கூடாது என உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி இந்த கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், இது தொடர்பான ஒரு வழக்கில் திமுக தரப்பில் பேனர்கள் வைக்கப்பட மாட்டாது என்று உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், பேனர்கள் வைப்பதற்கு ஒப்பந்தம் பெற்றிருந்த காண்ட்ராக்டர் தான் 12 வயது சிறுவனை பணியில் அமர்த்தி இருக்கிறார். இந்த சம்பவத்தை அடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும், விழுப்புரம் முதன்மை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் பலியான சிறுவனின் குடும்பத்தினருக்கு தற்காலிகமாக ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

👍 Also Read 👉 பச்சையப்பாஸ் சில்க்ஸ், செங்கல்வராயன் சில்க்ஸ் துணிக் கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை

கடந்த 2019ம் ஆண்டே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேனர்கள் வைக்கக்கூடிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டேன் எனக் கூறி உள்ளதாகவும், கட்சி தொண்டர்களை பேனர்கள் வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அனுமதியின்றி பேனர்கள் வைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள் மாவட்டங்களுக்கும், தாலுகா நீதிமன்றங்களுக்கும் தான் சென்றபோது ஏராளமான பேனர்களை பார்த்ததாகவும் தெரிவித்தனர்.

பின்னர் பேனர்கள் வைப்பது முழுமையாக தடை செய்யும் வகையில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கு தொடர்பாக தமிழக அரசு 6 வாரங்களில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

No comments

Thank you for your comments