Breaking News

தனிநபர் நிலங்களில் பண்ணைக் குட்டைகள் அமைத்திட அழைப்பு

தருமபுரி, அக்.27-

தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திட  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களின் நிலங்களில் தனிநபர் பண்ணைக்குட்டைகள் அமைத்திட உடன்  விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளதாவது:-

தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் மூலம் பண்ணைக் குட்டைகளை தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் அமைத்து, நிலத்தில் விழும் ஒவ்வொரு மழைத்துளி நீரையும் சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். 

அதன் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் தனிநபர் நிலங்களில் பண்ணைக்குட்டைகள் அமைத்து, அருகிலுள்ள கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், வணிகநோக்கோடு அந்த பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்புத்துறை மூலம் மீன் வளர்ப்பு செய்து பயன்பெறும் வகையிலும் திட்டங்களை செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் நிலங்களில் தனிநபர் பண்ணைக்குட்டைகள் அமைத்து, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திட ஒத்துழைப்பு நல்கிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

🔥பொருளாதாரம் - அரசு திட்டங்கள்  நிலை என்ன? 👆🔔👍

இந்த வாய்ப்பினை விவசாயிகள்  முழுமையாக பயன்படுத்திக்கொள்ள பண்ணைக்குட்டை அமைத்து தரக்கோரும் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)-க்கு அனுப்பி வைக்கலாம். 

தகுதிகள் விபரம் பின்வருமாறு:

* தனிநபர் பெயரில் நிலம் இருத்தல் வேண்டும் (நில உடமைச் சான்று இணைக்கப்பட வேண்டும்).

* தனிநபர் நிலத்தில் குறைந்தபட்சம் 360 சதுரமீட்டர் பரப்பளவில் பண்ணைக்குட்டை அமைக்க இடம் இருக்கவேண்டும். 

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாளஅட்டை இருப்பின், நகல் இணைத்தல் வேண்டும்.

* தனது பெயரில் உள்ள வங்கி கணக்கு புத்தக நகல்

* ஆதார் அட்டை நகல்

* சிறு / குறு விவசாயி சான்று இணைக்கப்பட வேண்டும்.

எனவே, தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திட  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களின் நிலங்களில் தனிநபர் பண்ணைக்குட்டைகள் அமைத்திட உடன்  விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி  தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments