Breaking News

பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள்... காய்ச்சல் பரவுவதாக தகவல்!

காஞ்சிபுரம், செப்.14-

பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல் போன்ற காய்ச்சல் வரிசையில் உத்திரமேரூர் பகுதியில் குரங்கு கூட்டத்தால் பீதியால் காய்ச்சலுக்கு உள்ளாகி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியில் நூற்றுக்கணக்கான குரங்குகள் கூட்டம், கூட்டமாக வசித்து வருகின்றன.  இவையனைத்தும் உத்திரமேரூர் சட்டமன்ற  உறுப்பினர் அலுவலகம் அருகிலுள்ள உள்ள மேல்நிலை நீர்த்தேக்க த் தொட்டியை ஆக்கிரமிப்பு செய்து வாழ்ந்து வருகின்றன. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகிறனர். இந்நிலையில் இரவு முழுவதும் அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தங்கியிருந்துவிட்டு காலையில் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு படையெடுக்கும் குரங்குகள் இரவு வரை வீட்டுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன. 


அதேபோன்று கடைகளுக்குச் சென்று வரும் பெண்கள், குழந்தைகள், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளின் பைகளைப் பறித்து அட்டகாசத்தில் ஈடுபடுவதுடன், மனிதர்கள் மேலே ஏறி, தனது கோரமான பல்லைக் காட்டி அச்சுறுத்தும் பணியையும் செய்கின்றன. சில நேரங்களில் இந்த குரங்குகள் பொதுமக்களை தனது நகங்களால் கீறி காயப்படுதி விட்டுச் செல்வதால் பயந்துபோகும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். இந்த சூழல் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்கதையாகி விட்டது.

இதனால் பகலில் வீட்டைவிட்டு வெளியே வந்து சுதந்திரமாக நடமாட முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். மேலும் குரங்குகள் கட்டுப்பாட்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே அரசு தொடக்க ப் பள்ளி உள்ளது. அந்த பள்ளி வளாகத்துக்குள் புகுந்து அரிசி, பருப்பு, முட்டைகள், பாத்திரங்கள் ஆகியவற்றையும் தூக்கிச் செல்வதாகவும் பொதுமக்கள் தரப்பில் கதை கதையாக கூறப்படுகிறது. அதேபோன்று இங்கு வட்டார கல்வி அலுவலர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் உட்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இங்கு வரும் ஊழியர்கள், பொதுமக்கள் இந்த குரங்குகள் கூட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

எனவே வனத்துறையினர் இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டு போய் விட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள்  ஒட்டுமொத்தமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும் குரங்குகள்தானே என்று அலட்சியம் காண்பிக்காமல் பொதுமக்கள் நலன் கருதி அவர்கள் எவ்வகையிலும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் எடுக்கும் நடவடிக்கைகளையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments

Thank you for your comments