Breaking News

காட்பாடி பகுதியில் செல்போன் டவர் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு..! - இளைஞர்களுக்கு போலீஸார் மிரட்டல்!

 வேலூர், செப்.14-

காட்பாடி மிஷன் காம்பவுண்ட் அருகில் ஒரு வீட்டில் செல்போன் டவர் அமைக்கப்பட்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்தக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சுவரொட்டி ஒட்டினர். இதனால் காட்பாடி போலீஸார் இளைஞர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.


வேலூர் மாநகராட்சி 1வது மண்டலம், 4வது வார்டு ஜான் தெரு அருகில் ஒரு வீட்டின் மாடிப்பகுதியில் செல்போன் டவர் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் முடிந்து எரக்ஷன் எனப்படும் இணைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. பணிகள் முழுவதும் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அந்த வீட்டின் உரிமையாளர் முறையாக அனுமதி பெற்று நீதிமன்றத்தில் தடையில்லா ஆணையும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதை பரிசீலனை செய்து பார்த்து விட்டு காவல் துறையும் விட்டு விட்டது. இந்நிலையில் பொதுமக்கள் ஒன்று திரண்டும், டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த கோரியும் அண்மையில் காட்பாடி மிஷன் காம்பவுண்ட் பேருந்து நிறுத்தம் அருகில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செல்போன் டவர் அமைப்பதால் புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருக்கும். கதிர்வீச்சு இருக்கும், சிட்டுக்குருவிகள் வாழ்க்கை அழியும் என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

இவ்வாறு பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்க டிராய் அமைப்பு எங்கும் புதியதாக அனுமதி தரவில்லை என்று தெரிவிக்கிறது. இந்த அறிவிப்பு அடிக்கடி இணையதளங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு பகிரப்படுகிறது. நிலைமை இப்படி இருக்க எப்படி இங்கு மட்டும் புதியதாக செல்போன் டவர் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது என்பது புரியாத புதிராக உள்ளது. அத்துடன் நீதிமன்ற ஆணையை வேறு காண்பிக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக கதிர் வீச்சு காரணமாக புற்றுநோய் பரவும் ஆபத்து ஏற்படும் என்று சொன்னாலும் அதை யாரும் ஏற்க தயாராக இல்லை என்றே கூறலாம். விஞ்ஞான வளர்ச்சி இருந்தாலும் இதுபோன்ற பிரச்னைகளும் இருக்கத்தான் செய்கிறது. இதில் காவல் துறை ஊடே புகுந்து விளையாட தொடங்கியுள்ளது. அதாவது தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் என்ற பெயரில் செல்போன் டவர் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று காட்பாடி அசோக் நகர் பகுதி இளைஞர்கள் சுவரொட்டி அச்சடித்து காட்பாடி, வேலூர் பகுதிகளில் ஒட்டினர்.

இந்த நிகழ்வு கடந்த 9ம் தேதி நடந்தது. இதனால் ஆத்திரமடைந்த காட்பாடி காவல் ஆய்வாளர் ஆனந்தன், உதவி ஆய்வாளர் கார்த்தி ஆகியோர் காட்பாடி அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த கென்னிரோஜர் என்ற இளைஞரை தொடர்பு கொண்டு தொலைபேசி வழியாக தகவல் தெரிவித்துள்ளனர். அதில் நீ காட்பாடி காவல் நிலையத்துக்கு மாலை 5 மணிக்கு வர வேண்டும், இல்லையெனில் உன் மீது வழக்குப்பதிவு செய்வோம் என்று மிரட்டியுள்ளனர். 

இதற்கு பதிலளித்த கென்னி ரோஜர் ஐயா, நீங்கள் எது தொடர்பாக பேச வேண்டும் என்றாலும் குடியாத்தம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ லதாவை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறினார். 

இதனால் மேலும் ஆத்திரமடைந்த போலீஸார் நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா என்று காவல் துறைக்கே உரித்தான பாணியில் மிரட்டல் விடுத்துள்ளனர். வரும் 21ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

செல்போன் டவர் அமைக்கும் பிரச்னையில் காவல் துறை எதற்காக முனைப்பு காண்பிக்கிறது என்று தெரியவில்லை. ஒரு தனி மனிதன் வாடகை பெற வழிவகை செய்து தர காவல் துறை முன் நிற்கிறது என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அத்துடன் நீதிமன்ற உத்தரவு என்பது மட்டும் இங்கு பிரதிபலிக்கப்படுகிறது.

பொதுமக்களுக்காக காவல் துறையா? காவல் துறைக்காக பொதுமக்களா? என்று தெரியவில்லை. தடி எடுத்தவன் தண்டல்காரன் என்று சொல்லுவார்கள். அதுபோன்று காவல் துறை கூறுவதை கேட்டு நடக்க வேண்டும் என்று எழுதப்படாத சட்டத்தை பொதுமக்கள் மீது திணிக்க பார்க்கின்றனர் கடமைவீரர்களான காட்பாடி காவல் ஆய்வாளர் ஆனந்தனும், உதவி ஆய்வாளர் கார்த்திக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. 

காட்பாடி காவல் நிலையத்தில் இதுபோன்ற என்னென்ன கட்டப்பஞ்சாயத்துக்கள் நடக்கின்றன, யார், யார் இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர் என்ற விவரங்கள் வெட்டவெளிச்சத்துக்கு விரைவில் கொண்டு வரப்படும். இதுதான் இங்கு நடக்கும் கட்டப்பஞ்சாயத்து என்று சொன்னால் அது மிக பொருத்தமாக இருக்கும். "ப" வைட்டமின் கொடுத்தால் போதும், நியாயம் என்ன, அநியாயம் என்ன, எல்லாம் நான் சொல்வதுதான் சட்டம். சட்டம் என் கையில், முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்ஐஆர் எனது கையில் என்று கொக்கரிக்கிறார் ஆய்வாளர். 

இந்த செல்போன் அமைப்பதால் யாருக்கு லாபம் இருக்கிறதோ இல்லையோ காவல் துறைக்கு லாபம் கிடைக்கும் என்கின்றனர் அசோக் நகர் பகுதி வாழ் பொதுமக்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் இந்த பிரச்னையில் நல்ல தீர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி தருவார் என்று அசோக் நகர், மிஷன் காம்பவுண்ட் பகுதி வாழ் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மனிதன் நிம்மதியாக வாழ, குறிப்பாக நோய் நொடியின்றி வாழ வழிவகை செய்து தருவதுதான் காவல் துறையின் தலையாய கடமையாகும். நீதிமன்ற ஆணை உள்ளது என்று மட்டுமே ஒற்றை வரியில் சொல்லப்படுகிறது. வேறு எதுவும் சொல்ல மறுக்கிறது காட்பாடி காவல் நிலையம். 

இது போராட்டம், புரட்சி என்று வெடித்தால்தான் முடிவு வருமா? இல்லை சுமூகமாக தீர்வு எட்டப்படுமா? என்பது காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், டிஐஜி பாபு ஆகியோரின்  கைகளில்தான் உள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதையும், காவல் துறை இதில் யாருக்கு துணை போகிறது என்பதும் போகப் போகத்தான் தெரியும்.

No comments

Thank you for your comments